காஞ்சிபுரம் அருகே பஸ் மீது ஆட்டோ மோதி விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த தூசி கிராமம் அனுமந்தபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 60). ஆட்டோ டிரைவர்.
சரவணன் தனது நண்பர் நாராயணன் (50) என்பவருடன் காஞ்சிபுரம் பூ மார்க்கெட் செல்வதற்காக அதிகாலை நேரத்தில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் தனது ஆட்டோவில் வந்துள்ளார். செவிலிமேடு பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற தனியார் தொழிற்சாலை பஸ் தொழிலாளர்களை ஏற்றி செல்வதற்காக சாலையில் திடீரென நின்றது.
சாலையில் திடீரென நின்ற பஸ் மீது பின்னால் சரவணன் ஓட்டி வந்த ஷேர் ஆட்டோ எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த சரவணன் எதிர்பாராத விதமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் நாராயணன் படுகாயம் அடைந்தார்.
விபத்து குறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் படுகாயம் அடைந்த நாராயணனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஷேர் ஆட்டோ முன்பக்கம் நசுங்கி உயிரிழந்த சரவணன் உடலை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments
Thank you for your comments