வாலாஜாபாத் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ரூ.6 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
காஞ்சிபுரம், நவ.28-
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடல் மற்றும் வள்ளி மேடு ஆகிய கிராமங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.6 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் திங்கள்கிழமை மீட்டு அரசின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாரத்துக்கு உட்பட்ட வேடல் கிராமத்தில் தனிநபர் ஒருவர் 2 ஏக்கர் அளவில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக அக்கிராம நிர்வாக அலுவலர் ஏ.சுரேஷ் வட்டாட்சியருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
இதே போல அதே வாலாஜாபாத் அருகே இளையனார் வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளிமேடு கிராமத்தில் தனி நபர் ஒருவர் 4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அதில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஞானப்பிரகாசம் வாலாஜாபாத் வட்டாட்சியருக்கு அறிக்கை அளித்திருந்தார்.
இவ்விரு ஆக்கிரமிப்புகளையும் வாலாஜாபாத் நில அளவையர் சலீம் தலைமையிலான குழுவினர் அளவீடு செய்து அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து திங்கள்கிழமை வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன், துணை வட்டாட்சியர் கோமளா ஜெசிபி இயந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்புகளை மீட்டு அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் இருவரையும் அழைத்து இனி மேல் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்களின் மொத்த மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் என்றும் வட்டாட்சியர் லோகநாதன் தெரிவித்தார்.
படவிளக்கம் : வேடல் கிராமத்தில் ஜெசிபி இயந்திரம் மூலம் இரும்பு வேலிகள் அகற்றப்படுவதை பார்வையிடும் வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான குழுவினர்

No comments
Thank you for your comments