Breaking News

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2022-23ஆம் ஆண்டிற்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்  2022-23ஆம் ஆண்டிற்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெறுதல்

அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடத்தப்பெறுகிறது.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 15.11.2022, 16.11.2022 ஆகிய இரண்டு நாள்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைத் தீர்வுக் கூட்ட அரங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி வரை நடைபெறும். பங்கேற்பவர்களுக்குத் தேநீர், மதிய உணவு, குறிப்பேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்பெறும்.

மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை, வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களிலிருந்து அலுவலர் ஒருவர் மற்றும் பணியாளர் தொகுதி பொறுப்பு வகிக்கும் கண்காணிப்பாளர் நிலையில் ஒருவர் என இருவர், இரண்டு நாள்கள் நடைபெறும் ஆட்சிமொழிப் பயிலரங்கத்திலும், 16.11.2022 பிற்பகல் 4.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் 

ஆட்சிமொழிக் கருத்தரங்கில் மாவட்ட நிலை அலுவலர்கள், கோட்ட அலுவலர்கள், வட்டநிலை அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும்.

பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சிமொழித் திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச்செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே ஒப்பம், சுருக்கொப்பமிட வேண்டும் என்பது முதல் அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவும் எடுத்துரைக்கப்பெறும்.

ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்க முதல் நாள் தொடக்க நிகழ்ச்சிக்கு மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அவர்களும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும், இரண்டாம் நாள் நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்களின் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க சிறப்புரையோடு பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிறைவு செய்யப்பெறும்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments