காஞ்சிபுரத்தில் 13 பகுதிகளில் பகுதி சபாக் கூட்டங்கள்
காஞ்சிபுரம், நவ.3-
காஞ்சிபுரத்தில் 3 வது நாளாக 13 பகுதிகளில் பகுதி சபாக் கூட்டங்கள் நடத்தப்பட்டு அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து அதிகாரிகள் வியாழக்கிழமை கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
கிராமங்களில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படுவதைப் போல நகராட்சி,மாநகராட்சிப் பகுதிகளிலும் பகுதி வாரியாக மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து பகுதி சபைக் கூட்டங்கள் இம்மாதம் முதல் தேதி உள்ளாட்சி தினத்தையொட்டி நடத்தப் பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 51 வார்டுகளிலும் நவம்பர் மாதம் முதல் தேதி 18 இடங்களிலும்,மறுநாள் 2 ஆம் தேதி 11 இடங்களிலும்,வியாழக் கிழமை 13 இடங்களிலும் பகுதி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
காஞ்சிபுரம் 50 வது வார்டு பகுதியான மதுராமோட்டூர் பகுதியில் திருப்புண்ணிய நாகேச்சுவரர் கோயிலில் நடந்த பகுதி சபைக் கூட்டத்துக்கு மாநகராட்சி பொறியாளர் கணேசன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
சுகாதார அலுவலர் லட்சுமிப்பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் சங்கர், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக பிரதிநிதி மலர்மன்னன்,விஜயன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதே போல அதே 50 வது வார்டு பகுதியில் சின்னஐயங்குளம் காலணியில் நடந்த பகுதி சபைக் கூட்டத்துக்கு மாநகராட்சியின் மண்டலக் குழுத் தலைவர் சாந்திசீனிவாசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் உட்பட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பொதுமக்கள் பலரும் தெருநாய்கள் தொல்லை,கழிவுநீர் செல்லாமல் இருத்தல்,ஏரிகள் தூர்வாரப்படாமல் இருப்பது உள்ளிட்ட குறைகளை தெரிவித்தனர்.
இக்கூட்ட நிறைவுக்குப் பின்னர் சேதமடைந்திருப்பதாக பொதுமக்கள் கூறிய நியாயவிலைக்கடை,மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆகியனவற்றையும் மண்டலக்குழுத் தலைவர் சாந்தி சீனிவாசன் நேரில் பார்வையிட்டார்.
படவிளக்கம்}மதுராமோட்டூரில் நடந்த பகுதி சபைக் கூட்டத்தில் பேசுகிறார் காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன்

No comments
Thank you for your comments