Breaking News

பி.எம்.கிசான் பயனாளிகள் 13-வது தவணை தொகையினை பெறுவதற்கு eKYC எனும் ஆதார் எண் உறுதி அவசியம்

தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையான நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ-2000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6000/- மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.


தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி அவசியம் 

நடப்பாண்டில் 13 – வதுதவணையாக, அதாவது 2022, டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத்தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

எவ்வாறு ஆதார் எண்ணை உறுதி செய்வது?

பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.

1.    உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில்

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (one time password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம்  (அல்லது) பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

2.    உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்ற ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

எனவே, பி.எம்.கிசான் தவணைதொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறும், இது தொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால் உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments