Breaking News

காஞ்சிபுரத்தில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... 12 ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டியது

காஞ்சிபுரம்,நவ.1-

காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து 4 மணி நேரம் கனமழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததுடன் 12 ஏரிகள் முழுக்கொள்ளவவையும் எட்டியுள்ளது.



காஞ்சிபுரத்தில் அதிகாலை முதல் தொடர்ந்து 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது.இதனால் நகரில் பழைய ரயில் நிலைய சாலை, திருக்காலிமேடு, ஒலிமுகம்மது பேட்டை, மாமல்லன்நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. 


பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை விடப்பட்டிருந்ததாலும், தொடர்மழை காரணமாகவும் நகரில் பிரதான சாலைகள் உட்பட அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது.மழைப் பாதிப்புகளை கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் களைவதற்காக மாவட்ட நிர்வாகத்தால் 21மண்டலக்குழுக்களும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

மழையளவைப் பொறுத்தவரை காலை 10 மணி முதல் 12 மணி வரை மாவட்டத்தின் மொத்த மழையளவு 63.80 மி.மீ ஆகவும்,சராசரி மழையளவு 10.03 மி.மீ ஆகவும் இருந்தது.

ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பள்ளிகள் விடுமுறை காரணமாக ரத்தானது.

காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்க புத்தேரிதெரு,விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு ஆகியனவற்றில் பணிகள் நடந்து வந்தன. 

இவை முன்பு இருந்ததை விட குறுகலாக கட்டப்பட்டதாலும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே பணிகளை செய்யாமல் விட்டதாலும் தற்போது பணிகள் நடந்து கொண்டிருந்த போது வடிகாலில் மழைநீர் தேங்கி எப்பக்கமும் செல்லாதபடி நின்றது.

ஏரிமாவட்டம் என்ற பெயரையும் உடைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாவூர், கம்பராஜபுரம், பழையசீவரம், தாமல்,கரூர் தண்டலந்தேரி, கோவிந்தவாடி சித்தேரி, பெரியகரும்பூர், கோவிந்தவாடி பெரிய ஏரி, வேலியூர் பெரிய ஏரி, வேலியூர் சித்தேரி, கூரம்,கட்டவாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள ஏரிகள் முழுக் கொள்ளவை எட்டியுள்ளன. தடுப்பணைகளில் பழையசீவரம், உள்ளாவூர், வெங்கச்சேரி அனுமன்தண்டலம் ஆகியனவற்றில் நீர் நிரம்பி வழிகிறது.

படவிளக்கம்}காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் புதியதாகவும்,குறுகலாகவும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மழைநீர் வடிகால் கால்வாயில் தேங்கி நிற்கும் மழைநீர்

No comments

Thank you for your comments