சைதை மா.சு.அன்பழகன் அறக்கட்டளை சார்பில் 100 இருளர் இன குடும்பங்கள் தத்தெடுப்பு
காஞ்சிபுரம்,நவ.5-
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகன் மறைந்த சைதை மா.சு.அன்பழகன் அறக்கட்டளை சார்பில் சனிக்கிழமை தொடங்கப்பட்ட அறக்கட்டளை தொடக்க விழாவில் 100 இருளர் இன குடும்பங்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மகன் மறைந்த மா.சு.அன்பழகனின் பெயரில் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதி நரசிங்கராயர் தெருவில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த தொடக்க விழாவிற்கு அறக்கட்டளையின் தலைவர் மடுவை எல்.பரமசிவம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜி. விஷ்ணுதாஸ், செயலாளர் இ.ஆசைத்தம்பி,துணைச் செயலாளர் ஜி.ஜெயேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் எஸ்.சங்கர் வரவேற்று பேசினார்.முன்னதாக காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சிகேவி.தமிழ்ச்செல்வன் அறக்கட்டளை தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்து பேசினார்.
தொடக்க விழாவில் காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு 100 இருளர் இனக்குடும்பங்களை தத்து எடுத்தமைக்காக அறக்கட்டளை நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசினார்.பின்னர் இருளர் இன மக்களுக்கு 10 கிலோ அளவிலான அரிசி மூட்டைகளையும் வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மகன் மறைந்த மா.சு.அன்பழகனின் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார்.விழாவில் திமுக பகுதி செயலாளர்கள் திலகர்,வெங்கடேசன் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.




No comments
Thank you for your comments