‘பெண்களிடமிருந்து பறிக்க முடியாதது மொழி மட்டுமே’ - வரலாற்று ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் பேச்சு
காஞ்சிபுரம் அக்.11 -
ஆற்பாக்கம், மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திரு.வி.க.முத்தமிழ் மன்ற விழா வெகு சிறப்பாக நடந்தது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வரலாற்று ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் கலந்து கொண்டு பேசும்போது, 'ஆதி மனிதன் என்று சொல்லுவதைவிட, ‘ஆதித்தாய்’ என்று பெண்ணை முன்னிலைப்படுத்தி சொல்லும் வரலாறே உண்மையானது. ஆதித்தாய் கருவுற்ற காலச்சூழலில் அதிக தூரம் நடக்க முடியாத நிலையில், ஓர் இடத்தில் தங்க வேண்டியிருந்தபோது, அவளே முதல் முதலில் விவசாயத்தை மேற்கொண்டாள்.
அன்று முதல் இன்றுவரை பல்வேறு வரலாறுகளுக்குத் தொடக்கமாக இருக்கும் பெண்ணிடமிருந்து எல்லா உடைமைகளும் திறமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொழியை மட்டும் பெண்ணிடமிருந்து பறிக்கவே முடியாது. அதனால் தான் ‘தாய்மொழி’ என்று நம் தமிழ்மொழி அழைக்கப்படுகிறது. ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் விரைவில் பேசப் பழகிவிடும் இயற்கைச் சூழலே இதற்கு சான்றாகும்.
கி.மு.6 நூற்றாண்டிற்கு உரியதென இன்று கண்டெடுக்கப்பட்டுள்ள பானை ஓடுகளில் இருக்கும் ’தமிழி’ எழுத்துருக்கள், அக்காலச் சூழலில் வீட்டு வேலைகளை ஆண்கள் செய்ததற்கான அடையாளங்களாக அமைந்துள்ளன” என்றவாறு ’ஆதித்தமிழ்’ மொழியின் அடையாளங்கள் குறித்து பெண்ணை முன்னிலைப் படுத்துகிறது.
கம்பர், காளமேகப் புலவர், திரைத் தமிழில் கண்ணதாசன், தற்காலத்தில் கவிதை எழுதும் பல்வேறு கவிஞர்கள் என பலரது கவிதைகளையும் பாடல்களையும் மேற்கோள்களாகச் சுட்டிக்காட்டி' ஆய்வாளர் இரா. மன்னர் மன்னன் பேசினார்.
முன்னதாக கல்லூரி மாணவி சூரியஸ்ரீ’யின் பரதநாட்டியத்துடன் விழா தொடங்கியது. கவிதா வரவேற்புரை யாற்றினார். கல்லூரியின் அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், புலமுதல்வர் ரத்தினகுமாரி, தாளாளர் சுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சினிகா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் சீனிவாசன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments