பத்திரப் பதிவு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம்
வேலூர் :
வேலூர் மாவட்டம் பத்திரப்பதிவு அலுவலகம் வேலப்பாடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு இணைப் பதிவாளர்கள் நிலை-1, நிலை-2 என இணை பத்திரப் பதிவாளர்கள் பணிசெய்து வருகின்றனர்.
இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சொத்துக்கள் பதிவு, திருமண பதிவு, சொத்து வில்லங்கம் என சொத்து விற்பதற்கும், வாங்குவதற்கும் பத்திரப்பதிவு செய்திட நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இதனை பயன்படுத்திக் கொண்டு வெளி புரோக்கர்கள் மூலம் பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிலை-1 இணைப் பதிவாளர், நிலை-2 இணைப் பதிவாளர் மற்றும் மேல் அதிகாரிகள் மூலம் பத்திரப் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மேல் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர்.
இதனை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்து பதிவுகளும் ஆன்லைன் மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவும் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கும் மாற்றுவழிகளை கண்டுபிடித்து லஞ்ச லாவண்யத்தில் திளைக்கின்றனர் பத்திரப் பதிவுதுறையினர் என்றால் மிகையாகாது.
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது...
அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது...
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது
என்ற பாடல்வரிகளின் மூலம் அன்றே உணர்த்திவிட்டனர்.
தமிழக அரசு பத்திரப் பதிவுத் துறையில் பதிவு முறைகளை மற்றும் பணம் செலுத்தும் முறைகளை என அனைத்து டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும் பத்திரப் பதிவாளர்கள் உடனுக்குடன் பத்திரப் பதிவுகளை முறைகளை மேற்கொள்ளாமல் ஆவணங்கள் முறையாக இல்லை எனக்கூறி பத்திர பதிய வரும் மக்களை அலைக்கழித்து வருகின்றனர் மற்றொரு நாள் வந்தாலும் வேறு ஆவணங்கள் சரியில்லை என திருப்பி அனுப்பிவிடுகின்றனர் என பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுகின்றன.
வெளி புரோக்கர்களிடம் லஞ்சம் பணம் கொடுத்தால் போதும் உடனடியாக பத்திரப் பதிவுகள் செய்து விடுகின்றனர் அவர்களும் சொத்து மதிப்பிற்கும் ஏற்றார்போல் கணக்கிட்டு சொல்வதை பத்திரப்பதிவு செய்ய வருபவர்கள் கொடுக்க வேண்டும். இப்படி எழுதப்படாத சட்டங்களே அமலில் உள்ளது.
பத்திரப்பதிவு செய்யும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை வெட்டினால்தான் காரியம் சுலபமாய் முடிகிறது. சொந்தமாய் பிடிமண்கூட இல்லை, இதையாவது வாங்கி வைப்போம் என்று நினைப்பவரும் ‘சரி அழுது தொலைப்போம்’ என்ற மனப்பான்மையில் லஞ்சம் கொடுக்கிறார். ஊரை அடித்து உலையில் போடும் நில மாஃபியாவும் ‘கவனிக்க வேண்டியவங்களை கவனிச்சாத்தான் தொழில் நிம்மதியா ஓடும்’ என்ற மனோபாவத்தில் கொடுக்கிறார்.
பத்திரப் பதிவு அலுவலக ஊழியர்களும் அதிகாரிகளும் கமுக்கமாக இதையெல்லாம் வாங்கி சட்டைப் பைக்குள் விட்டுக்கொள்கிறார்கள். உண்மையில் இந்தப் பணம் சாதாரண ப்யூனில் தொடங்கி அமைச்சர்கள் வரைக்கும் செல்கிறது என்கிறார்கள்.
சரி, பத்திரப்பதிவு அலுவலகங்களில் மட்டும்தான் லஞ்சமா, நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று போட்டியிட்டு லஞ்சம் வாங்குகிறார்கள் ஆர்.டி.ஓ ஆபீஸிலும், வருவாய்த் துறை அலுவலகங்களிலும், ஆம்; இங்கெல்லாம் லஞ்சம் அதிக அளவில் தலைவிரித்தாடுகிறது என்கிறார்கள். சொல்லப்போனால் இந்தியாவில் முதன்மையாக லஞ்சம் ஆறாகப் பெருகி ஓடும் துறைகள் இவைதான்.
அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறையும் ரெய்டு நடத்தி நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனாலும் இவர்கள் மாறுவதாக இல்லை... காலச்சக்கரம் சுழற்சியே இதற்கு பதில் சொல்லும்...
No comments
Thank you for your comments