காஞ்சிபுரத்தில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் நூல் வெளியீட்டு விழா
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் ஸ்ரீராமானுஜ யாதவ அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைணவ மாநாட்டில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் நூலை ஸ்ரீஹரிமடம் மடாதிபதி நம்பிள்ளை ராமானுஜ மகாதேசிகன் சுவாமிகள் வெளியிட்டு பேசினார்.
காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீராமானுஜ யாதவ அறக்கட்டளை சார்பில் வைணவ மாநாடு யாதவ சத்திர பரிபாலன சபையின் தலைவர் கே.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. கௌரவத் தலைவர் ஸ்ரீராம் பாகவதர்,எம்.சீனிவாசன் பாகவதர், உத்தமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் வரதராஜன் பாகவதர் வரவேற்று பேசினார்.மாநாட்டிற்கு ஸ்ரீஹரிமடத்தின் மடாதிபதி நம்பிள்ளை ராமானுஜ மகாதேசிகன் சுவாமிகள் தலைமை வகித்து வைணவமும்,ராமானுஜரும் என்ற தலைப்பில் பேசினார்.
பின்னர் நாலாயிர திவ்யப் பிரபந்தம் நூலை அவர் வெளியிட அதனை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வாலாஜாபாத்.பா.கணேசன்பெற்றுக் கொண்டார்.இதனையடுத்து பல்வன் அறக்கட்டளையின் தலைவர் பா.போஸ்,ஆராவமுதன் ராமானுஜதாசர் ஆகியோரும் நூலினை பெற்றுக் கொண்டனர். விழாவில் திருப்பாவை பாசுரங்களை மனப்பாடமாக பாடிய குழந்தைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கோவை நாராயண ராமனுஜ ஜீயர் சுவாமிகள் வாழ்த்துரை வழங்கியதுடன் கிருஷ்ண பரமாத்மாவின் பாடல்களை பாட அனைவரும் சேர்ந்து உற்சாகமாக பாடினார்கள்.அறக்கட்டளையின் சென்னை பொருளாளர் எம்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.
முன்னதாக காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலிருந்து தொடங்கிய பஜனைக் கோஷ்டியினரின் ஊர்வலம் ராஜவீதிகள் வழியாக வந்து விழா நடைபெறும் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தது. விழாவில் கிருஷ்ணராகவும்,அனுமனாகவும் பக்தர்கள் இருவர் வேடமிட்டு வந்து நடனமாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

No comments
Thank you for your comments