காஞ்சிபுரத்தில் விவசாயிகள் சேவை மையம் தொடக்க விழா
காஞ்சிபுரம், அக்.17-
காஞ்சிபுரத்தில் அனைத்து வேளாண் இடுபொருட்கள் மற்றும் அது சார்ந்த சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான விவசாயிகள் சேவை மையம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் பெறும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவை மையம் தொடங்குமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் சேவை மையம் தொடங்கப்பட்டது.
காஞ்சிபுரம் வணிகர் வீதியில் இம்மையத்தை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எம்.இளங்கோவன் திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், மத்திய அரசு நாடு முழுவதும் 600 சேவை மையங்களை திறந்திருப்பதாகவும், காஞ்சிபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மையத்தில் விவசாயிகள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான இடுபொருட்கள்,வேளாண் மருந்து வகைகள் ஆகியனவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
சேவை மைய திறப்பு விழாவிற்கு மதராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் எம்.ராஜா, எஸ்.கே.எம்.ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்,உர விற்பனையாளர்கள்,விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments