கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய இறங்கிய மூவர் பலி... விடுதியின் உரிமையாளர் தலைமறைவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சத்தியம் கேளிக்கை விடுதியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய இறங்கிய மூவர் பலி
ஸ்ரீ பெரும்புத்தூர் காவல்துறையினர் மூன்று பேர் மீது 5பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
விடுதி மேலாளர் முரளி,ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய இருவர் கைது
தலைமறைவாக உள்ள விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி போலீசார் வலைவீச்சு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சத்தியம் கிராண்ட் ரெசார்ட் என்கிற கேளிக்கை விடுதியில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கச்சிபேடு பகுதியை சேர்ந்த 4 பேர் வந்தாக சொல்லப்படுகிறது.
இதில் ரங்கநாதன்(51), நவீன்குமார்(30), திருமலை(18) ஆகியோர் சுத்தம் செய்திட கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நிலையில் மேலே ஒருவர் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ரங்கநாதன்,நவீன்குமார்,திருமலை ஆகிய மூவரும் அக்கழிவுநீரில் மூழ்கி இருக்கின்றனர்.
இதனையெடுத்து மேலேயிருந்த உடன் வந்த நபர் ஒருவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.பின்னர் இது குறித்து ஸ்ரீ பெரும்புத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டில் இறங்கி மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த மூவர் கழிவுநீர் தொட்டியில் மூழ்கிய தகவலறிந்த குடும்பத்தினர், உறவினர் மற்றும் கிராம மக்கள் என ஏராளமானோர் அங்கு குவியந்தனர்.இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பதட்ட நிலையை தவிர்ப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.
கழிவுநீர் தொட்டில் மூழ்கிய ரங்கநாதன்,நவீன்குமார்,திருமலை ஆகிய மூவரும் இறந்த நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டெடுத்தனர்.
வேலைக்கு சென்றவர்கள் பிணமாக மீட்கப்பட்டதை கண்டு குடும்பத்தினரும்,உறவினர்களும் கதறி அழுதனர். இதனையெடுத்துமூவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து மூவர் மீது வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புத்தூர் போலீசார் சத்தியம் கிராண்ட் ரெசாட்டின் மேலாளர் முரளி,ஒப்பத்ததாரர் ரஜினி ஆகிய கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவான கேளிக்கை விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.
இதில் உயிரிழந்த திருமலைக்கு கடந்த நாட்களுக்கு முன்பே திருமணமானவர் என்பதும் கடந்த சில ஆண்டுகளாகவே தனியார் நிறுவன செப்டிக் டேங்க்குகளில் சுத்தம் செய்திட இறங்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.தொழிற்சாலை நிறைந்த இந்த பகுதியில் தொடர்ந்து இத்தகைய சம்பவம் நிகழ்வது தொடர்கதையாகி வருவது குறிப்பிடதக்கது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது விபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டது, மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் கழிவு நீரை அகற்றியது, எஸ்சி/எஸ்டி பணியாளர்களை பயன்படுத்தியது, மனிதக் கழிவுகளை மனிதர்களை அகற்ற பயன்படுத்தியது, எந்த ஒரு உபகரங்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டியில் பணியாற்றியது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.



No comments
Thank you for your comments