Breaking News

130 கோடி இந்தியர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் இரண்டு நீர்மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரதமரின் கிராம சாலைகள் திட்டம் III-ஐ யும்   இன்று துவங்கி வைத்தார்.  



கூட்டத்தில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மஹாகல் நகருக்கு விஜயம் செய்ததாகவும், இன்று மணி மகேஸ்வரனின் அருளைப்பெற  வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். சம்பா பற்றிய விவரங்களைப் பிரதமரிடம் பகிர்ந்து கொண்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். இந்தக் கடிதத்தை பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

சம்பா மற்றும் இதர தொலைதூர கிராமங்களுக்கு சாலை இணைப்பு வழங்கும் பன்னோக்கு திட்டங்களையும், வேலை உருவாக்கத்தையும் தொடங்கிவைக்கும்  வாய்ப்பு பெற்றதற்காக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  இமாச்சலப் பிரதேசத்தில் தாம் கழித்த நாட்கள் பற்றி நினைவுகூர்ந்த பிரதமர், மலைகளின் இளமையும், தண்ணீரும் மலைகளுக்குப் பயன்படுவதில்லை என்பது இப்போது மாறி வருவதாகக் குறிப்பிட்டார். "இப்போது மலையக இளைஞர்கள் இப்பகுதியின் வளர்ச்சியில் தீவிர பங்கு வகிப்பார்கள்" என்று அவர் கூறினார்.

"130 கோடி இந்தியர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது" என்று பிரதமர் கூறினார். மேலும், “இந்தியாவின் விடுதலையின் அமிர்தகாலம்  தொடங்கியுள்ளது, இந்த காலகட்டத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை அடைய வேண்டும். இன்னும் சில மாதங்களில், இமாச்சல பிரதேசம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. அதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, ​​இமாச்சலும் நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடையும். அதனால், வரும் 25 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் நமக்கு மிகவும் முக்கியமானது” என்று பிரதமர் விளக்கினார்.

தில்லியில் இமாச்சலப் பிரதேசத்திற்குச் செல்வாக்கு குறைவாக இருந்த நாட்களை நினைவு கூர்ந்த பிரதமர், அதன் கோரிக்கைகள் மற்றும் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக, சம்பா போன்ற மத நம்பிக்கையும், இயற்கை எழிலையும் கொண்ட  முக்கியமான இடங்கள் வளர்ச்சிப் போட்டியில் பின்தங்கியிருந்தன. சம்பாவின் வலிமையை தாம் அறிந்திருந்ததால், முன்னேறத்துடிக்கும் மாவட்டமாக அறிவித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது என்று திரு மோடி தெரிவித்தார்.  ஒரே பாரதம் என்ற  உணர்வில் கேரளாவிலிருந்து குழந்தைகள் இமாச்சலத்திற்கு வருவது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சியின் வேகத்தை இரட்டிப்பாக்கிய இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் வலிமையை  இமாச்சலம் இன்று உணர்ந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் குறைவாகவும், அதே சமயம் அரசியல் ஆதாயங்கள் அதிகமாகவும்  உள்ள பகுதிகளுக்கு மட்டுமே முந்தைய அரசுகள் சேவைகளை வழங்கிவந்ததாக அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாக, தொலைதூர மற்றும் பழங்குடியினர்  வசிக்கும் பகுதிகளின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகவே இருந்தது. "சாலைகள், மின்சாரம் அல்லது தண்ணீர் எதுவாக இருந்தாலும், அத்தகைய பகுதிகளின் மக்கள்தான் கடைசியாக பலன்களைப் பெற்றனர்", "இரட்டை என்ஜின் அரசின் பணியாற்றும் முறை மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. 

மக்களின் வாழ்க்கையை எப்படி எளிதாக்குவது என்பதே எங்களது முன்னுரிமை ஆகும். அதனால்தான் பழங்குடியினர் பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். எரிவாயு இணைப்புகள், குழாய் மூலம் குடிநீர், சுகாதார சேவைகள், ஆயுஷ்மான் பாரத், சாலை இணைப்பு போன்ற தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்க்கையை மாற்றும் நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். 

கிராமங்களில் நலவாழ்வு மையங்களை உருவாக்குகிறோம் என்றால், மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் திறக்கிறோம்” என்று அவர்  கூறினார். சுற்றுலாவைப் பாதுகாப்பதற்காக தடுப்பூசி போடுவதில் இமாச்சலப் பிரதேசத்திற்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டிலேயே மிக வேகமாக தடுப்பூசி சதவீதத்தை எட்டியதற்காக முதலமைச்சர் மற்றும் அவரது குழுவினரை திரு மோடி பாராட்டினார்.

கிராமப்புற சாலைகள் அமைப்பது குறித்து குறிப்பிட்ட பிரதமர், சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2014 வரை ரூ.1800 கோடி செலவில் 7000 கி.மீ நீளமுள்ள கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் வெறும் ரூ. 5000  கோடி செலவில் 12000 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலம் 3000 கிமீ கிராமப்புற சாலைகள் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசம் கோரிக்கைகளுடன் டெல்லிக்கு வந்த நாட்கள் மலையேறிவிட்டதாக பிரதமர் கூறினார். இப்போது இமாச்சல் புதிய திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் ஆகியவை அதன் உரிமைகளுக்கான கோரிக்கைகள் பற்றிய தகவல்களுடன் வருகிறது. “உங்கள் (மக்கள்) கட்டளைதான் எனக்கு மிகவும் தலையாய ஆணையாகும். நீங்கள் தான் எனது எஜமானர்கள்.   இதை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன், அதனால்தான் உங்களுக்கு சேவை செய்வதில் வித்தியாசமான மகிழ்ச்சியையும், ஆற்றலை எனக்கு அளிக்கிறது” என்று பிரதமர் கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை சுட்டிக்காட்டிய பிரதமர், “நாடு முழுவதும் மலைப்பகுதிகள், அணுக முடியாத பகுதிகள், பழங்குடியினர் பகுதிகளில் விரைவான வளர்ச்சிக்கான மகா யாகம் நடந்து வருகிறது” என்றார். இதன் பலன்கள் இமாச்சலத்தின் சம்பாவில் மட்டும் அல்லாமல், பாங்கி-பர்மௌர், சோட்டா-படா பங்கல், கிரிம்பார், கின்னவுர் மற்றும் லாஹவுல்-ஸ்பிடி போன்ற பகுதிகளும் பலன்களைப் பெறுகின்றன என்று திரு மோடி தெரிவித்தார். முன்னேறத்துடிக்கும் மாவட்டங்களின் வளர்ச்சி பட்டியலில் சம்பா இரண்டாவது இடத்தைப் பெற்றதற்காக அவர் வாழ்த்து தெரிவித்தார்.

பழங்குடியின சமூகங்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், சிர்மவூரின் கிரிபார் பகுதியில் உள்ள ஹதி சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதில் அரசு மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு நமது அரசு எவ்வளவு முன்னுரிமை அளித்து வருகிறது என்பதை இது காட்டுகிறது" என்று அவர் மேலும் கூறினார். 

இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியில் உள்ள முந்தைய அரசுகள் தேர்தல் நேரத்தில் மட்டுமே தொலைதூர மற்றும் பழங்குடியின கிராமங்களைப் பற்றி நினைத்தன, ஆனால் இன்றைய இரட்டை எஞ்சின் அரசு இருபத்தி நான்கு மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய பாடுபடுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கொரோனா பெருந் தொற்றின் போது ஏழை குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசு மேற்கொண்ட முயற்சிகளை நினைவுகூர்ந்த பிரதமர், இலவச ரேஷன் திட்டத்தை எடுத்துரைத்தார். "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவு தானியங்களை அரசு வழங்கி வருவதை உலகமே ஆச்சரியத்துடன் பார்க்கிறது" என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவில் கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் வெற்றி குறித்து சிலாகித்த திரு மோடி, சுகாதாரத் துறை மற்றும் ஆஷா பணியாளர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பை பாராட்டினார். "சேவை மனப்பான்மை வலுவாக இருந்தால் மட்டுமே இத்தகைய வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன" என்று திரு மோடி மேலும் கூறினார்.

வேலைவாய்ப்பில் மலைவாழ் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி விளக்கிய பிரதமர், இப்பகுதியின் வலிமையை இங்குள்ள மக்களின் வலிமையாக மாற்ற முயற்சித்து வருகிறோம் என்றார். "பழங்குடியினர் பகுதிகளில் உள்ள நீர் மற்றும் காடுகளின் செல்வம் விலைமதிப்பற்றது" என்று அவர் கூறினார். 

நீர் மின்சார உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட சம்பா பகுதி நாட்டுக்கு  சொந்தமானது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள் மின் உற்பத்தித் துறையில் சம்பா மற்றும் இமாச்சலத்தின் பங்கை அதிகரிக்கும் என்று பிரதமர் கூறினார். "சம்பாவும், இமாச்சல பிரதேசமும் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் பல நூறு கோடிகள் சம்பாதிக்கும், மேலும் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்", என்றார். “கடந்த ஆண்டும் இதுபோன்ற 4 பெரிய நீர் மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு கிடைத்தது. சில நாட்களுக்கு முன்பு பிலாஸ்பூரில் தொடங்கப்பட்ட ஹைட்ரோ இன்ஜினியரிங் கல்லூரி இமாச்சல பிரதேச இளைஞர்களுக்கும் பயனளிக்கும்”, என்றார்.

தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கைவினை கலைகளில் இமாச்சலத்தின் வலிமையை எடுத்துரைத்த பிரதமர், உள்ளூரில் பெயர் பெற்ற பூக்கள், சுக், ராஜ்மா மத்ரா போன்ற உணவு வகைகள், வித்தியாசமான காலணிகள், வேலைப்பாடுகள் நிறைந்த தாம்பாளங்கள்,  பாங்கி கி தாங்கி என்னும் கொட்டை வகை போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் சுயஉதவி குழுக்களைப் பாராட்டினார். இந்த தயாரிப்புகளை அவர் நாட்டின் பாரம்பரியம் என்று அழைத்தார். உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிகளுக்கு  ஒத்துழைப்பு அளிக்கும் சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்களைப் பிரதமர் பாராட்டினார். ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் இந்த தயாரிப்புகளும் விளம்பரப்படுத்தப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு இவற்றை வழங்க முயற்சிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இரட்டை என்ஜின் அரசு, அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை மதிக்கும் அரசாகும். சம்பா உட்பட, முழு இமாச்சலமும் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின் பூமியாகும். குலுவில் நடந்த தசரா திருவிழாவிற்கு தாம் சென்றதை நினைவுகூர்ந்த பிரதமர், நமக்கு ஒரு பக்கம் பாரம்பரியமும், மறுபுறம் சுற்றுலாவும் உள்ளது என்று குறிப்பிட்டார். டல்ஹவுசி மற்றும் கஜ்ஜியார் போன்ற சுற்றுலாத் தலங்கள் ஆன்மீகம் மற்றும் சுற்றுலா வளத்தின் அடிப்படையில் இமாச்சலத்திற்கு உந்து சக்தியாக இருக்கும் என்று அவர் கூறினார். “இரட்டை என்ஜின் கொண்ட அரசு மட்டுமே இந்த சக்தியை அங்கீகரிக்கிறது. இமாச்சல்  பழைய வழக்கத்தை மாற்றி புதிய பாரம்பரியத்தை உருவாக்கும் தனது முடிவை எடுத்துள்ளது” என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்த பிரம்மாண்டமான கூட்டத்தில்   இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் உறுதியை தாம் காண்பதாக கூறிய பிரதமர்,   இமாச்சல பிரதேச மக்களின்   கனவுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக  உறுதியளித்தார்.

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு ஜெய் ராம் தாக்கூர், ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு கிஷன் கபூர், திருமதி இந்து கோஸ்வாமி மற்றும் பிஜேபி மாநிலத் தலைவர் திரு. சுரேஷ் காஷ்யப் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments