Breaking News

ஏற்காட்டில் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க கல்வித்துறை அமைச்சரிடம் மனு

ஏற்காடு, ஆக.1-

 ஏற்காட்டில் உள்ள நாகலூர் ஊராட்சி ஜெ.நகர் அருகிலுள்ள மாதிரிப்பள்ளி மற்றும் நாகலூரில் உள்ள அரசுப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவ-மாணவிகள் ஏற்காடு மலையில் உள்ள 70 கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 



இம்மாணவ- மாணவிகள் தினமும் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் பலர் நடந்தும் பள்ளிக்கு செல்கின்றனர். ஏற்கனவே பஸ் வசதி இருந்தும் இந்த நிலை ஏற்படுகிறது. என்வே மாணவ- மாணவிகள் கஷ்டத்தை போக்க அதற்கு ஏற்றவாறு பஸ் வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என ஏற்காடு மலை கிராம பள்ளியில் ஆய்வு செய்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு கொடுக்கப்பட்டது. 

இந்த மனுவை நாகலூர் ஒன்றிய கவுன்சிலரும் வனக்குழு உறுப்பினருமான சின்னவெள்ளை கொடுத்தார். மேலும் அதில், வேலூர் ஊராட்சியில் உள்ள நீடூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி, சொனப்பாடி கிராமத்திலுள்ள அரசுப்பள்ளி கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அதை சரி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். 

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,  

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்குட்பட்ட புளியங்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பழுதடைந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. செய்தியைப் படித்த உடனே புளியங்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

பள்ளியைப் பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதியளித்து விடைபெற்றேன். ஏற்காடு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சித்ரா அவர்களைத் தொடர்புகொண்டு பள்ளி சீரமைப்பு பற்றி விவாதித்து,  மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் ‘புதிய கட்டிடம் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கையை உடனே செய்யுமாறும், துறை ரீதியான உதவிகளைச் செய்வதற்குக் காத்திருப்பதாகவும்’ உறுதியளித்தேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்களின் வழியில் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம்! 

“அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்!” என்பதை நிரூபிப்போம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments