கீழே சிதறும் பொருள் ரேஷனில் வழங்க தடை
சென்னை, ஆக.1-
'ரேஷன் கடைகளில் கீழே சிதறும் உணவு பொருட்களை, கார்டுதாரர்களுக்கு வினியோகிக்கக் கூடாது' என, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்
அரிசியின் தரத்தை, கிடங்குகளிலேயே சரிபார்த்து தரமான அரிசி மட்டுமே அனுப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய பின், தரமற்ற அரிசி கண்டுபிடிக்கப்படும் சமயங்களில், வாணிபக் கழக கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். கார்டுதாரர்களுக்கு தரமுள்ள பொருட்களை மட்டுமே வினியோகிக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள், கிடங்கில் இருந்து சப்ளை செய்யப்பட்டு, ரேஷன் கடைகளில் லாரிகளில் இறக்கும் போதும், கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்யும் போதும், பொருட்கள் கீழே சிதறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கீழே சிதறிய பொருட்களை, கார்டுதாரர்களுக்கு வழங்கும் பொருட்களோடு கலந்து விடாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments