Breaking News

பத்து ஆண்டுகளாக முடங்கி இருந்த வாரியங்களுக்கு புத்தூயிரூட்டியவர் முதல்வர் ஸ்டாலின்! - அமைச்சர் இராஜகண்ணப்பன் பேச்சு

ராமநாதபுரம், ஆக.28- 

ராமநாதபுரத்தில் பதிவு பெற்ற கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகணங்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்டஉதவிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்.குமார் ஆகியோர் வழங்கினர்.  


ராஜகண்ணப்பன் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த வாரியங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்துயிரூட்டி, கடந்த ஓராண்டில் தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ. 420 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கி உள்ளார். பார்திபனூரில் ரூ.ஒரு கோடி மதிப்பில் துணை செவிலியர் பயிற்சி மையத்தை மக்களுக்கு முதல்வர் அர்ப்பணித்தார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சமாக இருந்த பதிவு பெற்ற தொழிலாளர் எண்ணிக்கை  தற்போது 55 ஆயிரம் ஆக குறைந்துள்ளது. 


ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கும் சிறப்பு திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் புறவழி சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

அடிமட்ட   தொழிலாளர்கள்  வாழ்வு மேம்பட முதல்வர் தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறந்த ஆட்சியை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். 



தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தலைவர் பொன்குமார் பேசியதாவது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர் வாரியம் உள்பட 17 நல வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. 

ஆறு லட்சம் தொழிலாளர்களின் கோரிக்கை மனுக்கள் கடந்த 10 ஆண்டுகளில் தேங்கி கிடந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி கடந்த ஒரே ஆண்டில் 5 லட்சம் பேருக்கு ரூ. 420 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தி வழங்கப்படாத   விபத்து நிவாரண உதவித்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம், இயற்கை மரண உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம், திருமண உதவித்தொகை 4 மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 



கடந்த 10 ஆண்டுகளாக  10 ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டுமே  வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு கட்டுமான தொழிலாளர்கள் வாரியத்தில் 321 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். கடந்த 10 ஆண்டு வாரியம் முடங்கியதால் 3 லட்சம் உறுப்பினர்கள் மட்டும் இருந்தனர். 

கடந்த ஓராண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த பல்வேறு துரித நடவடிக்கைகள். மூலம் 22 லட்சம் உறுப்பினர்கள் கூடுதலாக, சேர்க்கப்பட்டுள்ளனர். தொழில் துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது 3 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. தொழில் துறை முன்னேற்றத்தால் வேலை வாய்ப்பு, பொருளாதாரம் பெருக வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களில் தலை சிறந்த முதல்வராக திகழும் மு.க.ஸ்டாலின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 



தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்று சொந்த வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்கள் சொந்த வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள ரூ. 4 லட்சம் நிதி உதவி தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் வீட்டு மனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இதில் பதிவு செய்து மூன்றாண்டு தொடர் புதுப்பித்தல் அடிப்படையில் வீட்டு வசதி வழங்கும் திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை வழங்கப்படுகிறது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர் 743 பேர், பதிவு பெற்ற அமைப்பு சாரா ஓட்டுநர் 1034 பேர், நலவாரிய தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி, திருமணம் ஓய்வூதியம் என 551 பேர் உள்பட 2,328 பயனாளிகளுக்கு ரூ.43.18 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், நவாஸ் கனி எம்பி, கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுப்ரமணியன், உதவி ஆணையர் கயல்விழி உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments