யார் யாருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை? என்ன சான்றிதழ்கள் பெறவேண்டும்?
தமிழ்வழிக்கல்வி பயின்றோர், முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அரசாணை நிலை எண் 122, மனித வள மேலாண்மைத்(கே.2)துறை, நாள் 02/11/2021–ன்படி,தமிழ்நாட்டில் தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடி நியமனம் மேற்கொள்ளும்பொழுது மேற்கண்ட பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்க அரசு தற்போது ஆணையிட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட முன்னுரிமை பெற விரும்பும் பதிவுதாரர்கள் தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்கள் அவர்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர்களிடமும், முதல் தலைமுறை பட்டதாரியாயின் அதற்கான சான்றிதழ்களை வருவாய் துறையின் தகுதியான அலுவலரிடமும் மற்றும் கொரோனா பெருந்தொற்றால் பெற்றோர்களை இழந்தவர்கள் வருவாய் துறையின் தகுதியான அலுவலர் மூலம் பெறப்படும் சான்றிதழின் அடிப்படையிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்னுரிமை பதிவு செய்து பயன்பெற இதன்வழி அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், விபரங்களுக்கு 044-27237124 என்ற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
No comments
Thank you for your comments