கோடி கோடியாக பணம் கொடுத்தாலும் விளை நிலத்தை விட்டு கொடுக்க மாட்டோம்... பரந்தூர் விமான நிலையம் வலுக்கும் எதிர்ப்பு
கழனியில் வேலை செய்துவிட்டு வந்து, களைத்துப் போன நிலையிலும் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கையில் கருப்பு கொடி ஏந்தி கோஷமிட்டு ஊர்வலம் போன பரந்தூர் கிராம மக்கள்.
கோடி கோடியாக பணம் கொடுத்தாலும் விளை நிலத்தை விட்டு கொடுத்து விட்டு வெளியேறமாட்டோம் என கூறும் கிராம மக்கள்...
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பரந்தூர், வளத்தூர், தண்டலம், நெல்வாய், மேல்பெடவூர், மடப்புரம்,மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட எடையார்பாக்கம்,குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்கம்மாபுரம் சிங்கிலிபாடி உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 4750 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க 12 கிராமத்தை சேர்ந்த கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக விளை நிலங்களுடன், குடியிருப்புகளும் அகற்றப்படவுள்ளதாக அறிந்து பரந்தூர் கிராம மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கழனியில் வேலை செய்துவிட்டு களைத்துப்போய் மாலையில் வீடுகளுக்கு வந்த பரந்தூர் கிராம மக்கள், அனைவரும் ஒன்று கூடி தங்கள் குழந்தைகளுடன் கைகளில் கருப்பு கொடியை ஏந்தி கிராம வீதியில் ஊர்வலமாக வந்து விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரந்தூர் கிராம மக்கள் போராட்டம் செய்வதை அறிந்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தங்களின் வாழ்வாதாரமான விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் கோடி கோடியாக பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் அவைகளை விட்டு வெளியேற மாட்டோம் என்றும்,கிராம மக்கள் யாரும் கிள்ளு கீரைகள் அல்ல என்றும், 12 கிராம மக்களும் பொங்கி எழுந்து போராடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments