இளைஞர் திறன் திருவிழா மற்றும் திறன் பயிற்சி தொடக்கம்... உடனே பதிவு செய்யலாம்...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் இன்று (01.07.2022) மாவட்ட அளவிலான இளைஞர் திறன் திருவிழா மற்றும் திறன் பயிற்சி பதிவு செய்வதற்கான இணையதளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி 01.07.2022 மற்றும் 02.07.2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு மாவட்ட அளவிலான இளைஞர் திறன் திருவிழா மாவட்ட ஆட்சியரகம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடத்தப்படுகிறது.
இவ்விழாவின் முதல் நாள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப. அவர்கள், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், ஆகியோரால் இளைஞர் திறன் பயிற்சிக்கான www.kanchiskills.in என்ற இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் அனைத்து துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் பயிற்சி தொடர்பான வேலைவாய்ப்பு விவரங்கள், சுயதொழில் முனைவோருக்கான வழிக்காட்டுதல்கள், திட்டங்கள் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் வசதிகள் குறித்த விவரங்கள் இளைஞர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் பயற்சியளிக்கும் அரசுத்துறைகளையும் தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மாநில அளவில் 388 வட்டாரங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 வட்டராங்களில் தலா 1 வீதம் 5 இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படவுள்ளது. தீன் தயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா யோஜானா (DDU - GKY) திட்டமானது 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஊரக ஏழை இளைஞர்களுக்கு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கல்வி தகுதிக்கேற்ப திறன் பயிற்சி அளித்து நிரந்தர வருமானத்திற்கு வேலைவாய்ப்பு பெற்றுதரப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது வரை DDU - GKY திட்டத்தின் கீழ் 942 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.
2022 - 2023 ஆம் நிதியாண்டிற்கு DDU - GKY திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 800 இளைஞர்களை, இளைஞர் திறன் திருவிழா மூலம் வட்டாரம் வாரியாக தேர்வு செய்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒருபகுதியாக மாவட்ட அளவில் இளைஞர் திறன் திருவிழா தற்போது நடத்தப்படுகிறது.
முதல்வர் அவர்களின் கனவு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் படித்த / பயிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் (Sectors) குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதன் மூலம் இளைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது. திறன் பயிற்சி பெற்று வாழ்க்கையில் பயன் பெறும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 தொழிற் பிரிவுகளில் (Job Role) குறுகிய கால பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இம்மாவட்டத்தில் பல்வேறு கல்வித் தகுதிகளில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சியில் சேர்ந்து வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளார்கள். இம்மாவட்டத்தில் 2021-2022 வரை குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 367 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது குறுகிய கால பயிற்சித்திட்டத்தில் 509 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீண்ட கால தொழிற் பயிற்சியாக அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 5 தொழிற் பிரிவுகளில் (MMV, MRAC, Electronic mechanic, Technician Mechatronics, Welder) பயிற்சி அளிக்கப்பட்டு திறன்மிகு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு பெறக்கூடிய அளவில் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
மேலும், இம்மாவட்டத்தில் 2021-2022 வரை நீண்ட கால பயிற்சி பெற்று தொழிற்பழகுநர் பயிற்சித் திட்டத்தில் 190 பயிற்சியாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது நீண்ட கால பயிற்சியில் 119 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட பயிற்சிகளால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மிகு பயிற்சிகள் அளிக்கப்படுவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
இதன் மூலம், இம்மாவட்டத்தில் திறன் மிகு இளைஞர்கள் உருவாக்கப்பட்டு தொழிற் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள்.
மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் www.kanchiskills.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ. சிவ ருத்ரய்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் திரு.குமரகுரு நாதன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு அருணகிரி, காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் திருமதி.மலர்கொடி குமார் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments