Breaking News

தமிழகத்தில் இந்த நிதியாண்டில் மட்டும் 2.50 கோடி மரக்கன்றுகள் நடப்படும்... வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

காஞ்சிபுரம், ஜூலை 5 :

தமிழகம் முழுவதும் இந்நிதியாண்டில் மட்டும் 2.50 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் கூறினார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர்கள் மா.ஆர்த்தி(காஞ்சிபுரம்) ஏ.ஆர்.ராகுல்நாத் (செங்கல்பட்டு) ஆகியோர் தலைமை வகித்தனர். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் ரவிமீனா வரவேற்று பேசினார். கூட்டத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கியும், வன உயிரினங்களால் ஏற்பட்ட பயிர்ச்சேதத்துக்கு நிவாரணத் தொகையினை பயனாளிகளுக்கு  வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்  பேசியதாவது,

தமிழகத்தில் தற்போதைய வனப்பரப்பு 24 சதவிகிதமாக உள்ளது.இதை 33 சதவிகதமாக மாற்ற வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிதியாண்டிற்குள் தமிழகத்தில் 2.50 கோடி மரக்கன்றுகள் நடப்படும்.வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 261 கோடி மரங்கள் நட திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம்.இதுவரை தமிழகத்தில் 16 மாவட்டங்களில் விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம்.வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தும் 6 மாதத்துக்குள் சீரமைக்கப்படும்.

வயல்களில் காட்டுப்பன்றிகள், மயில்கள், குரங்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக விவசாயிகள் பலரும் புகார் தெரிவித்தனர். மயில்களை பிடித்து காட்டுக்குள் கொண்டு போய் விடப்படும்.குரங்குகளை பிடிக்க கூடுதலாக வனத்துறையில் பணியாட்கள் நியமிக்கப்பட்டு அவற்றை பிடிப்பதற்கான கூண்டுகளும் வாங்கப்படும்.பிடிப்பட்ட குரங்குகள் பின்னர் காட்டுக்குள் விடப்படும்.

வயல்களில் சுற்றித்திரியும் பன்றிகள் காட்டுப்பன்றிகளா அல்லது நாட்டுப் பன்றிகள என ஆய்வு செய்து அவை காட்டுப்பன்றிகளாக இருந்தால் பக்கத்து மாநிலமான கேரளத்தில் செயல்படுத்துவதைப் போல அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேசினார்.

இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர் (உத்தரமேரூர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), எஸ்.ஆர்.ராஜா(தாம்பரம்) ம.வரலட்சுமி(செங்கல்பட்டு) எஸ்.எஸ்.பாலாஜி(திருப்போரூர்) வனத்துறைத் தலைவர் வி.சையத் முஜமில் அப்பாஸ், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள் வி.நாகநாதன், கருணப்பிரியா, சென்னை வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வனத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments