Breaking News

டாப்செட்கோ வாயிலாக ஆண்கள்.. பெண்களுக்கான கடன் திட்டங்கள்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மக்கள் சமூக மற்றும் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில், பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கி வருகிறது.

1.பொது காலக் கடன்  திட்டம்

சிறு தொழில் / வியாபாரம் செய்ய தனி நபருக்கு அதிகபட்சம் ரூ.15.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.  இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு 6% முதல் 8 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.  கடன் தொகை திரும்ப செலுத்த வேண்டிய கால அளவு 3 முதல் 8 ஆண்டு காலம்

2. பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள்

பெண்களுக்கான கடன் திட்டங்கள் பொறுத்தவரையில், புதிய பொற்காலத் திட்டம் மற்றும் சிறுகடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா) என இரு கடனுதவி திட்டங்கள் பெண்களின் சுயசார்பு நிலையினை வலியுத்தும் நோக்குடன் செயல்படுத்தப்படுகிறது.

இவற்றில் புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் சிறுதொழில் / வியாபாரம் செய்வதற்கு ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் ரூ.20.00 இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு 5% வட்டி வசூலிக்கப்படுகிறது.  கடன் தொகை திரும்ப செலுத்த வேண்டிய கால அளவு 3 முதல் 8 ஆண்டு காலம்.

சிறுகடன் வழங்கும் திட்டமானது (மகிளா சம்ரிதி யோஜனா) தொழில் முனையும் பெண்களுக்கு சிறுகடன் வழங்கும் நோக்குடன் செயல்படுத்தப்படுகிறது.  இத்திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ சிறு தொழில் / வணிகம் செய்தவற்கு “சிறுகடன்” வழங்கப்படுகிறது.  ஒரு சுயஉதவிக்குழுவில் அதிகபட்சம் 20உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.  இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஒருவருக்கு 

அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையும் கடனுதவி 4% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.  கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டிய கால அளவு 4 ஆண்டுகள்.

3. ஆண்களுக்கான சிறுகடன் திட்டம்

இத்திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குக்களின் உறுப்பினர்கள் தனியாக அல்லது குழுக்களாக சிறு தொழில் / வணிகம் செய்தவற்கு “சிறுகடன்” வழங்கப்படுகிறது.  ஒரு சுயஉதவிக்குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.  இத்திட்டத்தின் கீழ் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையும் கடனுதவி 5% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.  கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டிய கால அளவு 4 ஆண்டுகள்.

4.கறவை மாட்டுக் கடன்

கறவை மாடுகளுக்கான கடன் திட்டத்தின் கீழ் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000/- வரையிலான திட்ட மதிப்பீட்டில் தலா 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது.  ஆண்டு வட்டி விகிதம் 6%

5. புதிய கடன் திட்டங்கள்

இத்திட்டத்தின் கீழ் இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுய தொழில் துவங்கவும், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்த சுயதொழில் துவக்கவும் கடனுதவி வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் வரை கடனுதவி 6% முதல் 8% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.  கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டிய கால அளவு 10ஆண்டுகள்.

மேலும், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம் வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை கடனுதவி 4% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.  கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டிய கால அளவு 4 ஆண்டுகள்.

6. சிறு/குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மான்யத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சிறு/குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகள் அமைப்பதற்காக, மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.  புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையாக 50 % அரசு மான்யம் அரசால் வழங்கப்படுகிறது.

கடன் பெறுவதற்கான தகுதிகள்

1) பயனாளி பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும்.

2) குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3) பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

4) ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

5) சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.  திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அலுவலகங்கள்:

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் இக்கடனுதவி திட்டங்களுக்கான விண்ணப்பப் படிவங்களை வேலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்


No comments

Thank you for your comments