வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று (25.06.2022) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழா சிறப்பு பேருரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க 22.12.2021 அன்று இதே இடத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்றதில், வருவாய் துறையின் சார்பில் 432 மனுக்களும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 510 மனுக்களும் பிற துறைகளின் சார்பில் 253 மனுக்களும் என மொத்தம் 1195 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் இன்றைய தினம் 312 பயனாளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சம் மதிப்பில் உதவித்தொகைகள், 20 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 165 பயனாளிகளுக்கு ரூ.18.69 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் நிவாரண உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் உதவித்தொகை, குடிசை மாற்று வாரியம் சார்பில் 116 பயனாளிகளுக்கு ரூ.2.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி, வட்டார வளர்ச்சித் துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.14.70 இலட்சம் மதிப்பில் பசுமை வீடுகள், மகளிர் திட்டத்தின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.1.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் மதிப்பில் காதுக்கு பின் அணியும் காதொலிக் கருவி மற்றும் இலவச செல்போன், 7 பயனாளிகளுக்கு ரூ.32.34 இலட்சம் மதிப்பில் பழங்குடியினர் குடியிருப்புகள் என மொத்தம் 764 பயனாளிகளுக்கு ரூ.10.02 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பெறப்பட்ட மனுக்களில் 119 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு ரூ.8.71 கோடி செலவில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில், குறுகிய காலத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்திய அரசு நமது தமிழக அரசு. அதுமட்டுமன்றி கொரோனா காலகட்டத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 இலட்சம் நிதியுதவி மற்றும் வைப்புத்தொகை என்கிற திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி வருவது பெருமைக்குரியதாகும். நமது முதல்வர் நாளொன்றுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களின் நல்வாழ்வு எனது லட்சியம் என்று உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே முதல்வர். இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் பொதுமக்கள் பயன் பெற கூடிய வகையில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் ஒன்றியத்தில் பட்டா இல்லா இடங்களில் வசிப்பவர்கள் புதிய மின் இணைப்புகள் வழங்க பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் மீனு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தக்க நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் மின் இணைப்புகள் வழங்கிட ஆவன செய்யப்படும்.
தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன அதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்து இன்று மக்கள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். நமது பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி இந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்கள். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 17202 விவசாயிகளுக்கு ரூ.1.22 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நமது முதல்வர் அதைப்போலவே நமது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரூ.77.49 கோடி மதிப்பில் 22251 ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்து கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.2756 கோடி மதிப்பில் மகளிர் பெற்றுள்ள கடன் தொகையை ஒரே உத்தரவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தள்ளுபடி செய்துள்ளார். தற்போது பால் விலை, பெட்ரோல் விலை ஆகியவை குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் பெண்களின் வாழ்வு மேம்படுத்துவதற்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து அதை சட்டமாக்கி மேலும் பெண்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள ஆணை வழங்கிய இந்திய திருநாட்டில் ஒரே முதல்வர் நமது முதல்வர். மேலும் அனைத்து பகுதிகளிலும் மேம்பாலம் பணிகள், சாலைகள் சீரமைப்பு பணிகள், கட்டமைப்பு வசதிகள் போன்றவை விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்பதற்காக இன்றைக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த அரசுக்கும் நமது முதல்வருக்கும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தர வேண்டும் என இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொரோனா பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். இன்றைய தினம் இந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.சுந்தர் (உத்திரமேரூர்) திரு.சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் திரு.க.தேவேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.பி.ஸ்ரீதேவி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் திரு.சேகர் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments