Breaking News

விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டுத்தொகையாக ரூ.49லட்சம்... மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் :

விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டுத்தொகையாக ரூ.49லட்சம், காஞ்சிபுரம் மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.


விபத்து வழக்கில் வலது காலை முழுமையாக இழந்த நபருக்கு நிவாரணமாக காப்பீட்டுத்தொகை ரூ.49லட்சத்துக்கான காசோலையினை காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன் வழங்கினார்.

காஞ்சிபுரம் வட்டார சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மக்கள் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட நீதிபதி (பொறுப்பு) எம்.இளங்கோவன் தலைமை வகித்தார்.


தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி சிவஞானம்,கூடுதல் சார்பு நீதிபதி திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்,நீதிபதியுமான கே.எஸ்.கயல்வழி வரவேற்று பேசினார்.

இம்முகாமில் காஞ்சிபுரம் வரதராஜர் நகரை சேர்ந்த எஸ்.மோகன்ராஜ்க்கு கடந்த 14.8.2019 ஆம் தேதியன்று நடந்த விபத்தில் வலது கால் முழுமையாக பாதிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதியது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த மக்கள் நீதிமன்றம் எஸ்.மோகன்ராஜ்க்கு ரூ.49லட்சம் நஷ்டஈடு வழங்க தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. 

இத்தொகையினை மாவட்ட நீதிபதி(பொறுப்பு)எம்.இளங்கோவன் மக்கள் நீதிமன்றத்தில் எஸ்.மோகன்ராஜிடம் வழங்கினார்.

மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் ரூ.12 கோடிக்கு தீர்வு காணப்பட்டதாக வட்டார சட்டப்பணிகள் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் நீதிபதிகள் சரண்யா செல்வம்,ஆர்.ராஜேஸ்வரி, வழக்குரைஞர்கள் சங்க தலைவர்கள் எஸ்.ஜான்,கார்த்திகேயன்,அரசு வழக்குரைஞர் சத்தியமூர்த்தி ஆகியோர் உட்பட வழக்கறிஞர்கள்,வழக்காடிகள்,நீதிமன்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.நிறைவாக நீதிபதி வாசுதேவன் நன்றி கூறினார்.


No comments

Thank you for your comments