லைம்லைட்டில் திமுக... வட்டமிடும் பாஜக... பரபரப்பு தகவல்கள்...
சென்னை:
திமுகவின் ஊழல் குறித்து அதிமுக ஒருபக்கம், பாஜக ஒரு பக்கம் புகார்களை தொடர்ந்து வாசித்து கொண்டிருக்கின்றனர். அது தொடர்பாக திமுக எப்படி சமாளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
இப்போதைக்கு இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தாலும், கட்சியை மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்துகொள்வதே அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு என்று எடப்பாடி பழனிசாமி நம்புவதாக தெரிகிறது.. அதற்காக, கட்சியை பலப்படுத்துவது, சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பது, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவது என வழக்கமான ரூட்கள் ஒருபக்கம் இருந்தாலும், திமுக ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களை நிலைநாட்டிக் கொள்ளவே தீவிரம் காட்டி வருகிறாராம்.
அதனால்தான், சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடியிடம், திமுக மீதான ஊழல் புகார்களை, குறைகளை லிஸ்ட் போட்டு தருவதாக கடந்த மாதமே செய்திகள் கசிந்தன.. அதற்கேற்றபடி, அதிமுக தலைவர்களை பிரதமர் சந்தித்து பேசியபோது, சொன்னபடியே புகார் லிஸ்ட்டையும் தந்தார்கள் என்றும், பிரதமர் மோடி, அதை பெற்றுக் கொண்டுவிட்டு எந்த பதிலும் சொல்லவில்லை என்றும் கூறப்பட்டது..
அதற்கு பிறகுதான் பாஜக அண்ணாமலை, திமுகவின் ஊழல் அமைச்சர்கள் குறித்து அம்பலப்படுத்துவேன் என்று செய்தியாளர்களிடம் அடுத்தடுத்து சொல்லி பரபரப்பை ஏற்படுத்த துவங்கினார்.
இதற்கிடையில், எடப்பாடி & கோ பிரதமரிடம் தயாரித்து வழங்கிய அந்த ரகசிய புகார் அறிக்கையில், யார் யார் இடம்பெற்றுள்ளனர், என்ன மாதிரியான விஷயங்கள் இடம்பெற்றிருந்தன என்ற தகவல்கள் முழுமையாக வெளிவராவிட்டாலும், ஓரளவு கசிய துவங்கியது.. அது 3 பக்க அறிக்கை என்கிறார்கள்.. பிரதமரிடம் வழங்கப்பட்ட அந்த புகார் அறிக்கை, அமித்ஷா டேபிளில் இருக்கிறதாம்.. அது தொடர்பாக உளவுத்துறையும் களமிறங்கி உள்ளதாக கூறுகிறார்கள்..
டாப் 5 ஊழல் மாஜிக்கள் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளதாம்.. அத்துடன், எந்த பொறுப்பிலும் இல்லாத, ஆனால், திமுக குடும்பத்துக்கு மிக மிக நெருக்கமான நபரின் பெயரும் இடம்பெற்றுள்ளதாம்.
தேர்தல் சமயங்களில் இவரை ஆப் செய்யாததால்தான், திமுக தலைதூக்கிவிட்டது, இந்த முறை இவருக்கு செக் வைத்தால், எம்பி தேர்தலில் திமுக கூட்டணி பலவீனமடையும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாம்.. மேலும், ஆளுநரிடமும் திமுக அரசு பற்றி விரைவில் புகார் புத்தகம் தரப்போவதாக பாஜக சொல்லி உள்ள நிலையில், அது குறித்து டெல்லி மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று தெரியவில்லை..!
இதுஒருபுறம் இருக்க, எடப்பாடி & கோ தந்த அந்த ரகசிய அறிக்கையில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ள திமுக தரப்பு கண்டுகொள்ளவே இல்லையாம்.. காரணம், மடியில் கனமில்லை என்ற நம்பிக்கைதான் காரணம்..
இந்த முறை ஆட்சி அமைந்ததில் இருந்து, அனைத்துக்கும் முறையாகவே கணக்கு உள்ளதால், ஊழலிலும் யாருமே ஈடுபடாமல் ஸ்டிரிக்ட்டாகவே அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாலும், அவ்வப்போது கூட்டங்களை நடத்தி கடிவாளங்கள் போடப்பட்டு வருவதாலும், பாஜக, அதிமுக சூழ்ச்சிகள் ஒருபோதும் பலிக்காது என்று தெம்பாக சொல்கிறது திமுக தரப்பு..
எனினும், ஏதாவது ஒன்றில் இவர்கள் சிக்க மாட்டார்களா என்பதே இப்போதைய தமிழக பாஜகவின் ஒரே குறிக்கோளாக இருந்து வருவதாகவும், அதனால்தான் திமுகவுக்கு கலக்கத்தை தந்து லைம்லைட்டிலேயே வைத்திருக்க நினைப்பதாகவும் தகவல்கள் வருகின்றன..
இருப்பினும், எடப்பாடி தரப்பு, அளவுக்கு அதிகமாக புகார் சொன்ன அந்த மேலிட உறவு யார்? எதற்காக அவரை மட்டுமே குறிவைத்து, ரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டது? என்பதே தற்போது வட்டமடித்து வரும் கேள்வி..!
No comments
Thank you for your comments