மோடிக்கே கிளாஸ் எடுத்தவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி பெருமிதம்
சென்னை, ஜூன் 6-
பிரதமர் மோடியை மேடையில் வைத்துகொண்டே கிளாஸ் எடுத்தவர்தான் நம்முடைய தலைவர். இதுதான் திராவிட மாடல் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ‘கலைஞர் 99’ என்று பெயரில் கருத்தரங்கு மற்றும் திராவிட மாடல் பயிற்சி தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
“நான் இளைஞரணி செயலாளராகப் பதவியேற்று முதல் நிகழ்ச்சி கலைஞர் அரங்கத்தில் இளைஞரணி சார்பில் நடக்கிறது. இது எனக்குப் பெருமையாக உள்ளது. கலைஞர் இன்னும் நம்முடனேயே இருக்கிறார் என்ற எண்ணம் தான் எனக்கு உள்ளது. அவரின் எண்ணங்கள் தான் நம்மை எல்லாம் வழிநடத்தி செல்வதாக உணர்கிறேன்.
ஒரு தாத்தாவாக அவர் எங்களுக்கு நேரம் தந்ததை விட ஒரு தலைவராக நம் அனைவருக்காகவும் நேரம் ஒதுக்கி தந்திருக்கிறார். மிகப்பெரிய ஆளுமைகள் தொடங்கி சாமானிய மனிதர்கள் வரை எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் தன்னுடைய நேரத்தை ஒதுக்கித்தந்துள்ளார்.
பல்வேறு துறையை சேர்ந்த ஆளுமைகளுடன், எளிய மக்களுடன் அவர் நேரடியாக உரையாடி இருக்கிறார். அவர்களுக்காக தன் வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழித்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த சந்திப்புகள், உரையாடல்கள் தான் அவரை ஏகப்பட்ட சமூக நீதித் திட்டங்களை தீட்ட வைத்தன. அதன் மூலமாக கோடிக்கணக்கான தமிழக மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்துள்ளார்.
திமுகவுக்கு மாற்று பாஜக என்கிறார்கள். அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை பாஜக கபளிகரம் செய்வதாகவும் கூறுகிறார்கள். அதைப் பற்றிய அரசியல் புரிதலோடு நாம் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களையும் திமுக பக்கம் ஈர்க்கும் நோக்கில் செயல்படவேண்டும்.
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் போன்றோரின் எழுத்துகள், சாதனைகள் அனைத்தும் நம் கையில் உள்ளன. கூடுதலாக திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் நம் தலைவரின் சாதனைகளும் உள்ளன.
நம் கொள்கைகளை, நம் சாதனைகளை மக்கள் மொழியில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டும் தான் நம் வேலை. இது பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் போன்றோர் உருவாக்கிய திராவிட பூமி.
நம் முதலமைச்சர் வழிநடத்தும் சுயமரியாதை மண் என்பதை தொடர்ந்து காக்கும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கூறி இந்த பாசறை கூட்டத்தையும், இந்த கருத்தரங்கையும் தொடங்கி வைக்கும் வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் கழக தலைவருக்கு நன்றி.
அது என்ன திராவிட மாடல் ஆட்சி. அதற்கு சிறிய விளக்கம் மட்டும் சொல்லுங்கள் என்று பலபேர் கேட்கிறார்கள். 10 நாட்கள் முன்பு நம் பிரதமர் சென்னை வந்திருந்தார். அவரை மேடையில் வைத்துக்கொண்டே இது தான் திராவிட மாடல் ஆட்சி, இதுதான் மாநில சுயாட்சி என்று மோடிக்கே தைரியமாக வகுப்பெடுத்தவர் தான் நம் முதலமைச்சர்.
அதேபோல் நம் மாநிலத்துக்கு எதெல்லாம் தேவை. எதெல்லாம் தேவை இல்லை என்பதை அவருக்கு வகுப்பெடுத்த இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் என்றால் அது நம் கலைஞர் வழியில் வந்த நம் தலைவர் தான்.
இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்று பெயர் எடுத்திருக்கிறார். நான் நம்பர் ஒன் முதலமைச்சராக இருப்பது போதாது. தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற வேண்டும். அதற்காக தொடர்ந்து உழைப்பேன் என்று தலைவர் சொல்லி இருக்கிறார். அதற்காக அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து உழைக்கிறார்கள்.
இளைஞர் அணி நிர்வாகிகளாகிய நாம் நம் பணிகளை இவர்களோடு ஒருங்கிணைந்து நம் கழக பணிகளை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
No comments
Thank you for your comments