உலக சுற்றுச்சூழல் தின விழா விழிப்புணர்வு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதனடிப்படையில் இன்று (05.06.2022) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் உலக சுற்றுச்சூழல் தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
1972 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்தது. பொதுமக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. முதல் உலக சுற்றுச்சூழல் தினமானது, 1974 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள உறுப்பு நாடுகளில் இருந்து, ஏதேனும் ஒரு நாடு ஒரு கருப்பொருளை மையமாக வைத்து உலக சுற்றுச்சூழல் தினத்தை ஏற்று நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டு, ஒரே ஒரு பூமி என்பதை கருப்பொருளாகக் கொண்டு ஸ்வீடன் நாடு ஏற்று நடத்துகிறது.
அதிகமாக நகரமயமாக்கல், தொழிற்பெருக்கம் மற்றும் நாகரிக மாற்றத்தினால், சுற்றுச்சூழல் மாசடைந்து, பூமியில் வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்தியுள்ளது. அரசு முயற்சிகளால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவதை திறம்பட கட்டுப்படுத்த இயலாது என்பதால், பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது.
மேலும் இந்த "ஒரே ஒரு பூமி" என்ற முழக்கம் குறித்து இயற்கையுடன் இணக்கமாக நீடித்து வாழ்வதன் அவசியம் குறித்தும், பசுமை வாழ்க்கை முறைக்கு மாறுவது குறித்தும் கவனம் செலுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் மரக்கன்றுகளை நடவும் மற்றும் அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இவ்விழாவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு சிறப்பாக பங்களிப்பு ஆற்றியதற்காக பசுமை விருதில் கலந்து கொண்ட 16 தொழிற்சாலைகள் மற்றும் தன்னார்வலர்களில் 3 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் இருவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்களால் இன்று வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியின் போது மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்களால் பசுமை விருது மற்றும் ரூபாய் ஒரு இலட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
மேலும் 2021 ஆம் ஆண்டில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளி, மேல் நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.ரவிச்சந்திரன், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments