Breaking News

தருமபுரி தேர் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நேரில் நிவாரணம் வழங்கிய அமைச்சர்

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று நேரில் வழங்கி ஆறுதல் கூறியுள்ளார்.


பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஅள்ளி கிராமத்தில் நேற்று (திங்கள்கிழமை) காளியம்மன் கோயில் நடைபெற்றது. விழாவின்போது அச்சு கழன்று தேர் சரிந்து விழுந்தது. இந்த தேரின் கீழே சிக்கி மனோகரன், சரவணன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை தமிழக உழவர் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன் மற்றும் சரவணன் உடலுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண நிதிக்கான அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். மேலும், காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் 4 பேரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளையும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ். செந்தில்குமார் அவர்கள், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி  ஆகியோர் முன்னிலையில் இன்று (14.06.2022) வழங்கினார்கள். 



அதன் பின்னர், மாதேஅள்ளி கிராமத்துக்கு நேரில் சென்று தேர் விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட அமைச்சர், விபத்து குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். 

பின்னர் இதுகுறித்து  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள மாதேஹள்ளி கிராமத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கோவில் தேர் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அவர்களில் அப்பகுதியினைச் சேர்ந்த மனோகரன் மற்றும் சரவணன் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளதோடு, இந்த விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்கள். 

மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டு, உடனடியாக அங்கு நேரில் சென்று அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியினை வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள மாதேஹள்ளி கிராமத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கோவில் தேர் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த 2 நபர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று நேரில் வருகை தந்து உயிரிழந்த சி.மனோகரன் மற்றும் பெ.சரவணன் ஆகிய இருவரின் உடல்களுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, உயிரிழந்த சி.மனோகரன் அவர்களின் மனைவி  முருகம்மாள் மற்றும் உயிரிழந்த பெ.சரவணன் அவர்களின் மனைவி லட்சுமி ஆகிய இருவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5.00 இலட்சம் வீதம் ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலைகள் இன்று நேரில் வழங்கப்பட்டது. 

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பகுதிகளைச் சேர்ந்த பி.கே.முருகன், வே.மாதேஷ், கு.பெருமாள் மற்றும் பொ.மாதேஷ் ஆகிய 4 நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000/- வீதம்  4 நபர்களுக்கும் ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கியதோடு, இவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டுமென மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள மாதேஹள்ளி கிராமத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய திருக்கோவில் தேர் திருவிழாவிற்கான முன்னேற்படு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் கடந்த 8.06.2022 அன்று 3.00 மணி அளவில் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு அதில் வருவாய்த்துறை, காவல்துறை, இந்துசமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மின்சார வரியம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள், மாதேஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இவ்விழா குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். 

இத்தேர் திருவிழாவிற்கான முன்னேற்படு பணிகள் அனைத்தும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இருந்தபோதும் எதிர்பாராதவிதமாக இந்நிகழ்வு ஏற்பட்டுவிட்டது. வருந்ததக்க நிகழ்வு. இக்கிராமத்தினருக்கு இதுபெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்களையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுகுறித்து உரிய விசாரனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரனையில் தேர் சப்பரத்தின் அச்சானி கழன்று இருசக்கரங்கள் கழன்றுவிட்டதன் காரணமாக இவ்விபத்து எற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதுபேன்ற நிகழ்வுகள் இனி ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. 

பொதுமக்களும் திருவிழாக்களில் மிகவும் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடன் விழிப்புடனும் இருக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை தேரோட்ட விழாக்குழுவினரும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன்  மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம்.பி.சுப்பிரமணி,  பி.என்.பி.இன்பசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


No comments

Thank you for your comments