Breaking News

நிலுவை புகார் மனுக்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி.ஏ.எஸ்.குமரி அவர்கள் தலைமையில் 2021-2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட நிலுவை புகார் மனுக்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாக ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி.ஏ.எஸ்.குமரி அவர்கள் தலைமையில் இன்று (30.05.2022) 2021-2022 ஆம் ஆண்டு பெறப்பட்ட நிலுவை புகார் மனுக்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி.ஏ.எஸ்.குமரி அவர்கள் தெரிவித்ததாவது :

மகளிர் ஆணையத்திற்கு பெண்கள் வந்து சமூக வன்முறை, வரதட்சணை, குழந்தைத் திருமணம், இரண்டாம் திருமணம், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு போன்றவை குறித்து தமிழகம் முழுவதும் மனுக்கள் வரப்பெறுகின்றன. 

இம்மனுக்களை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட சமூக நல அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தவுடன், மனுக்களின் மீது விசாரணை நடத்தி, மகளிர் ஆணைத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். 

மேலும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நடத்தி பெண்களுக்கு பாதுகாப்பான நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் குறிக்கோள்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கென இலவச பேருந்து பயண அட்டை, பெண்களின் பெயரில் வீட்டு மனை பட்டா போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

அதில் குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைத் திருமணங்கள் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை தடுத்திட வேண்டும். கடந்த மூன்று மாத காலத்தில், தமிழகத்தில் மகளிர் ஆணையத்திற்கு 1029 மனுக்கள் வரப்பெற்று 990 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதில் சுமார் 700க்கும் அதிகமாக சமூக வன்முறை குறித்த மனுக்கள் வரப்பெற்று தீர்வு காணப்பட்டுள்ளது. சமூக வன்முறை ஏற்படும் போது பெண்களின் அவசர உதவிக்காக 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது குறித்து விழிப்புணர்வு மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இக்கூட்டத்தில் இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசிற்கு பரிந்துரை செய்யப்படும் என  தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் திருமதி.ஏ.எஸ்.குமரி அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ம.சுதாகர், மாவட்ட சமூக நல அலுவலர் திரு.எம்.ரேவதி மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments