செங்கல்பட்டு கைலாசநாதர் கோயிலுக்கு ஜூன் 3-இல் கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு, பெரிய நத்தம் பகுதியில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
புராணகாலத்தில் இங்கு பூசை செய்து வந்த சிவாச்சாரியாரின் மகன் ஒருவன், இந்த திருக்கோயிலுக்கு பின்புறம் ஓடும் ஒரு சிற்றோடையில் மலர்ந்திருந்த செங்கழுநீர் மலர்களை நாள்தோறும் பறித்துவந்து கைலாசநாதரைப் பூசித்து வந்தான். ஒரு சமயம் மலர் பறிக்க சென்ற போது அரவம் தீண்டி அவன் மாண்டான்.
அன்று பூசைக்கான நேரம் கடந்ததால், மலர் பறிக்க சென்ற மைந்தன் இன்னும் வரவில்லையே என்று ஏங்கிய சிவாச்சாரியார், நீரோடைக்குச் சென்று பார்த்தபோது மைந்தன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து விழுந்து புரண்டு அழுதார்.
தனது மைந்தனால் பெருமானின் பூசைக்கு இடையூறு நேர்ந்துவிட்டதை நினைத்து அழுதார். அவ்வமயம் பெருமானின் திருவருளால் அவரது மகன் மீண்டெழுந்து செங்கழுநீர் மலர்களோடு தந்தையே இதோ வந்துவிட்டேன் என்று சொல்லி புன்சிரிப்புடன் திருக்கோயிலில் நுழைந்தான்.
அதனைக் கண்டு வியப்பெய்தி மகிழ்ச்சி அடைந்த சிவாச்சாரியார், கைலாசநாதரின் பெருங்கருணையை நினைத்து மனமுருகி அப்பெருமானின் திருவடி விழுந்து வணங்கி போற்றினார்.
செங்கழுநீர் மலர்களால் நாள்தோறும் பூசித்து வந்ததால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானுக்குச் செங்கழுநீசர் எனும் திருப்பெயரும் இந்த ஊருக்கு செங்கழுநீர்பட்டு எனும் திருப்பெயரும் வழங்கப்பட்டு, பின்னர் அது மருவி செங்கல்பட்டு என்று தற்போது ஊர் பெயர் வழங்கப்படுகின்றது.
ஒரு சமயம் அகத்திய முனிவர் இத்தலத்திற்கு வந்து பூசித்து தென்திசையை அடைந்ததாக வரலாறு.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது தண்டிக்கப்பட்ட ராகு கேது கிரகங்கள் பாவம் நீங்க இத்தலத்திற்கு வந்து கைலாசநாதரைப் பூசித்து சாப விமோசனம் பெற்றதாகவும் தல வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தத் திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்து சுமார் 35 ஆண்டுகள் கடந்து விட்டது. இங்குள்ள விமானங்கள், சந்நிதிகள், பிரகாரங்கள், மதில் சுவர் ஆகியன சிதிலமடைந்து காணப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயிலைப் புனரமைக்க துறை நிதி, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்புடனும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு விமானங்கள், சந்நிதிகள், பிரகாரங்கள், மதில் சுவர் ஆகியன முழுவதுமாக சீரமைக்கப்பட்டு தற்போது திருப்பணிகள் யாவும் நிறைவு பெற்றுள்ளது.
வரும் ஜூன் 3 ஆம்தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் யாகசாலை பூசைகள் நடைபெற உள்ளன. 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலையில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினரும் பெரிய நத்தம் பகுதியினரும் திருக்கோயில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments