Breaking News

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம் மற்றும் கட்டுப்பாட்டு அறை திறப்பு  என மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு...

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் கடந்த நவம்பர் 2021, டிசம்பர் 2021 ஆகிய மாதங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. இதனால் காஞ்சிபுரம்  மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி, நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. 

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து  நவரை பருவத்தில் நெல் சாகுபடி மொத்தம் 68,250 ஏக்கர்ககு மேல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நவரை பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில் நவரை பருவத்தில் மட்டும்  மொத்தம் 184.55 லட்சம் மெட்ரிக்டன் நெல் உற்பத்தி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடியாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டி மாவட்டம் முழுவதும் மொத்தம் 79 இடங்களில் தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் தற்போது நெல் கொள்முதல் பணிகள் நடைபெறும் 66  தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அரசு வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுகின்றனவா என்பதை கண்காணிக்க வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அலுவலர்களை பார்வையாளர்களாக நியமனம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் 1. தினசரி / நாள்தோறும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு இணையவழி பதிவு முறை டோக்கன் வரிசைபடி நெல் கொள்முதல் செய்வதை உறுதிபடுத்த வேண்டும். 

2. விவசாயிகளால் சமர்பிக்கப்படும் சிட்டா, அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் குத்தகை சான்று ஆகியவற்றை ஆய்வு செய்தல் வேண்டும். 3. இடைத்தரகர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் பணிகளில் தலையீடு செய்வதை கண்காணிப்பதுடன் உரிய அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அவற்றினை தடுத்திடவும், விதிமீறல்கள் பற்றிய புகார் தெரிவிக்க  மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 044-27237107 மற்றும் 044-27237207–ல் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments