Breaking News

கைத்தறி பட்டுச்சேலையில் தமிழக முதலமைச்சரின் முகம் வடிவமைப்பு! காஞ்சிபுரம் நெசவாளரின் சாதனை

காஞ்சிபுரம்

தக்காளி நிற கைத்தறி பட்டுச் சேலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் முகத்தோற்றத்தை வடிவமைத்து காஞ்சிபுரம் நெசவாளர் சாதனை படைத்துள்ளார்.

படவிளக்கம் 👉தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் முகத்தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட தக்காளி நிறத்தினாலான கைத்தறி பட்டுச் சேலை

காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்த நெசவாளர் சீனிவாசன் மகன் குமரவேல்(36) இவர் தக்காளி நிறத்தில் 12 முழ நீளமும்,இரண்டே முக்கால் அகலத்திலும் கைத்தறி பட்டுச் சேலை ஒன்றை நெய்துள்ளார்.அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் முகத்தோற்றங்களை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.இது குறித்து குமரவேல் கூறியது..

எனது பக்கத்து வீட்டுக்காரர் சுரேஷ் என்பவரிடம் திமுக பிரமுகர் ஒருவர் பட்டுச்சேலையில் தமிழக முதலமைச்சரின் உருவத்தை வடிவமைத்து தரும் வகையில் நெசவாளர்கள் இருக்கிறார்களா எனக் கேட்டுள்ளார். 

அதன்படி சுரேஷ் என்னைத் தொடர்பு கொண்டார். தக்காளி நிற பட்டுச் சேலையில், தூய தங்க ஜரிகையில், 12 முழம் நீளத்திலும், இரண்டே முக்கால் முழம் அகலத்திலும் ஒரு பட்டுச் சேலையை நெய்தோம்.

இதில் சிறப்பு என்னவென்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி எழுதி அண்மையில் வெளியிடப்பட்ட அவரும் நானும் என்ற புத்தகத்தின் முன்பக்க அட்டைப் படத்தை சேலையின் முந்தானையிலும், புத்தகத்தில் உள்ள வாசகங்களை சேலையின் உடல் முழுவதும் இருக்கும் வகையிலும் வடிவமைத்தோம்.

எனது தலைமையில் 4 பேர் இணைந்து தொடர்ந்து 2 மாதங்கள் உழைத்து இப்பட்டுச்சேலையை உருவாக்கினோம். சேலை பாடர் முழுவதும் அவரும், நானும் என்ற எழுத்துக்கள் மட்டும் வரிசையாக இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளோம்.


இதே போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி வெளியான உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தின் அட்டைப்படத்தை வெண்பட்டு வேட்டியின் கரையாகவும், உங்கள்தொகுதியில் ஸ்டாலின் குரல் என்ற வாசகங்கள் உள்ள வெண்பட்டு அங்கவஸ்திரமும் வடிவமைத்தோம்.

நாங்கள் உருவாக்கிய கைத்தறி பட்டுச் சேலையை அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியதாகவும் தெரிவித்தனர். இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பக்தர் ஒருவர் கேட்டுக்கொண்டபடி திருப்பாவையின் 30 பாசுரங்களும் அடங்கிய பாடல்வரிகளை சேலையின் உடலில் நெய்து கொடுத்துள்ளோம் என்றார்.


படம் விளக்கம் 👉அவரும் நானும் புத்தகத்தின் வாசகங்கள் நெய்யப்பட்டுள்ள பட்டுச் சேலை


 

No comments

Thank you for your comments