Breaking News

ரூபாய் 10 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் ரூபாய் 10 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். 


காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (18.05.2022) மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழா சிறப்பு பேருரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது…

17.12.2021 அன்று உத்திரமேரூர் ஒன்றியத்தில் இருக்கும், பொதுமக்களிடம்,  கோரிக்கைகள் அடங்கிய 929 மனுக்கள் பெறப்பட்டன அதில் 760 மனுக்களுக்கு இன்று தீர்வு கண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன, மீதமுள்ள 169 மனுக்களையும் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். 

இன்று 760 பயனாளிகளுக்கு ரூபாய் 10 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் 325 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது, முதியோர் உதவி தொகை 10 நபர்களுக்கும், குடும்ப அட்டை 10 நபர்களுக்கும், இருளர் சமுதாயத்தினருக்கு இருளர் இன சான்று, ஜாதிச் சான்று, 60  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் அடிப்படை வசதி ஆகிய தெருவிளக்கு, சாலை, இடுகாட்டிற்கு சென்று வரும் வழி, 10 நபர்களுக்கு சலவைப்பெட்டி, 10 நபர்களுக்கு தையல் இயந்திரம், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 119 ஏழை எளிய மக்களுக்கு இலவச வீடு வழங்குவதற்கான நிதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 

காது கேளாதோருக்கு 3 நபர்களுக்கு காது கருவி வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் ஐந்து இடங்களுக்கு தார்சாலை ரூபாய் ஒரு கோடியே 85 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. என 760 நபர்கள் கொடுத்த மனுக்கள் இன்று ரூபாய் 10 கோடியே 51 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற கூட்டத்தொடர் காரணமாக விடுபட்ட ஒன்றியங்களில் வாங்க படாத மனுக்கள் வெகுவிரைவில் மனுக்களை பெற்று அவர்களுக்கு உரிய பலனை இந்த அரசு நிச்சயமாக செய்யும் என்று இந்நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். 

பொதுமக்கள் இந்த அரசை எந்த நோக்கத்திற்காக நீங்கள் கொண்டு வந்தீர்களோ அந்த நோக்கம் நிறைவேற கூடிய அளவிற்கு இன்று பாடுபடுகின்ற ஒரே முதல்வர் நம்முடைய முதல்வர் என்பதை இந்த நேரத்தில் நான் பெருமையோடு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 

நமது முதல்வர் காலையிலிருந்து மாலை வரை 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நாட்டு மக்களின் நல்வாழ்வு எனது லட்சியம் என்று உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே முதல்வர் நம்முடைய தமிழக முதல்வர் என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் இன்றைக்கு எல்லா திட்டமும் வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் 505 திட்டங்கள் வாக்குறுதிகளாக தரப்பட்டன அதில் 300 க்கும் மேற்பட்ட திட்டங்கள் சட்டமாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்து இன்று மக்கள் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். 

நமது பகுதியில் நமது பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி இந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்கள். நமது முதல்வர் அதைப்போலவே 5 சவரன் நகை தள்ளுபடி செய்து நமது காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ரூபாய் 11 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி செய்து கொடுத்துள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 58.8 லட்சம் கோடி மதிப்பிலான 18 ஆயிரத்து 143 ஏழைகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்து தந்த ஒரே அரசு நமது அரசு. நமது மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் மட்டும் 13 ஆயிரத்து 115 விவசாயிகள் வாங்கிய கடன் ரூபாய் 89.41 கோடி  கடன்களை நமது அரசு தள்ளுபடி செய்துள்ளது 

கலைஞரின் வருமுன் காப்போம் என்கின்ற நல்ல திட்டம் 2006 - 2011 -ல் பயன்பாட்டில் இருந்தது இத்திட்டம் அடுத்து வந்த ஆட்சியாளர்கள் கிடப்பில் போடப்பட்டதால் பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் இதனை புத்துயிர் பெற நமது முதல்வர் இல்லம் தேடி மருத்துவம் என்ற உன்னத திட்டத்தினை துவக்கி வைத்தார், இதனால் கிராமங்களில் வசிப்பவர்கள் தங்களுடைய உடலை பரிசோதனை செய்து கொண்டு தங்களை பாதுகாப்போடு வாழ வழிவகை செய்யும் நல்ல திட்டம் இத்திட்டம்.

இத்திட்டத்தின் மூலம் கிராமத்திற்கு மருத்துவர்கள், மருத்துவம் பார்க்க கூடிய கருவிகள், மருந்துகள் அனைத்தும் ஊருக்கு எடுத்து வந்து பொதுமக்கள் இருக்கும் இடத்திலேயே பரிசோதனை செய்து அவர்களுக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உயர் சிகிச்சை பெற அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து முதலமைச்சர் அவர்களின் காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அதிகம் செய்து கொண்டிருக்கும் சூழலில் முந்தைய காலகட்டத்தில் கரும்பு கூட்டுறவு ஆலைக்கு எடுத்துச் சென்றாள் பணத்தினை பெற வருட கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது ஆனால் இன்றைக்கு நம்முடைய முதல்வர் அவர்கள் விவசாயிகளின் வறுமையை எண்ணி கரும்புக்கு கூடுதல் விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான உடனடியாக பணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு அதை நடைமுறைப்படுத்திய ஒரே முதல்வர் நமது முதல்வர். 

அதுமட்டுமில்லாமல் பெண்களின் வாழ்வு மேம்படுத்துவதற்கு பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து அதை சட்டமாக்கி மேலும் பெண்கள் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள ஆணை வழங்கிய இந்திய திருநாட்டில் ஒரே முதல்வர் நமது முதல்வர், ஏழை எளிய மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டும் என்பதற்காக இன்றைக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த அரசுக்கும் நமது முதல்வருக்கும் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தர வேண்டும் என இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.பி.ஸ்ரீதேவி, உத்தரமேரூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி.ஜி.ஹேமலதா ஞானசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments