காஞ்சியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது வைகாசித் திருவிழா
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அத்திவரதர் புகழ் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதுமான காஞ்சிபுரத்தில் உள்ள பழமையும் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில் தேவராஜ சுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் திருக்கோவிலில் உள்ள கொடிமரத்தில் கருடாழ்வார் சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார்கள்.
கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியருடன் உற்சவர் வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்தார்.
கொடியேற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் ந.தியாகராஜன் மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழாவினை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றது.
காஞ்சிபுரம் எஸ்.பி.சுதாகர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி வினோத் சாந்தாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன..
No comments
Thank you for your comments