ஈரோடு மாவட்டத்தில் இடி-மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை
ஈரோடு, ஏப்.19-
பலத்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் பகுதியில் பழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 11 மணி வரை மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
இதனால் பஸ் நிலையம், மணிக்கூண்டு, பன்னீர் செல்வம் பார்க், கருங்கல்பாளையம், வெண்டிபாளையம், வீரப்பன்சத்திரம் உள்பட நகரின் பல பகுதிகளில் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பலத்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் பகுதியில் பழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் மழை வெள்ளத்தை வெளியேற்றினார். பலத்த மழை காரணமாக காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது.
இதனால் நேற்று காலை காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களும் அவதி அடைந்தனர்.
இதேபோல் சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
மேலும் கவுந்தப்பாடி, சலங்கபாளையம், அய்யம் பாளையம், பொம்மம்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு திடீரென இடி- மின்னலுடன் பலத்த சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.
இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டே இருந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டன. மழை இரவு 12 மணி வரை சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் விவசாய நிலங்கள் பசுமையாக காணப்பட்டன.
அந்தியூர், பர்கூர் மற்றும் தட்டக்கரை, தாமரைக்கரை உள்பட மலை பகுதிகளிலும் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் மலை பகுதிகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
மொடக்குறிச்சி, அவல்பூந்துறை மற்றும் பல பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அம்மாபேட்டை, நெரிஞ்சி பேட்டை, சித்தார் பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் 12 மணி வரை பரவலாக மழை பெய்தது.
தாளவாடி, கேர்மாளம் மற்றும் திங்களூர் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. திங்களூர், காடட்டி, பேடர் பாளையம், மந்தைதொட்டி, சிக்கநந்தி மலைகிராமங்களில் இடி- மின்னலுடன் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது
இந்த மழையால் பேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளப்பா என்பவரின் 2 கன்று குட்டிகள் மின்னல் தாக்கி பலியானது.
பவானி, சித்தோடு, ஆப்பகூடல், பெருந்துறை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-27, கொடுமுடி-4.8, பெருந்துறை-20, பவானி-56, கோபி-25, சத்தியமங்கலம்-7, நம்பியூர்-9, சென்னிமலை-21, மொடக்குறிச்சி-38, கவுந்தப்பாடி-41.4, எலந்தகுட்டை-8.2, அம்மாபேட்டை-44, கொடிவேரி-5, குண்டேரிபள்ளம்-15.2. மாவட்டம் முழுவதும் 321.6 மி.மீட்டர் மழை பெய்தது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
No comments
Thank you for your comments