பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டும் -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் சாலவாக்கம் ஏசியன் பள்ளியில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் சாலவாக்கம் ஏசியன் பள்ளியில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் இன்று (30.04.2022) நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்ததாவது:
நலம் அதிலும் சிறுபான்மை நலம் என்று இங்கே கோடிட்டு சொல்வதன் பழமையான கருத்தை இந்நிகழ்ச்சியில் நினைவுபடுத்தினார்கள். இஸ்லாமிய சகோதரர்களுக்கு, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டவர்கள் துறையில் முதன் முதலில் சேர்த்தவர் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான். அதனால்தான், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, சிறுபான்மை மக்களுக்கு, தனித்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், கலைஞருடைய வழியில் வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்கென தனியாக ஒரு துறையை உருவாக்கி, அதன் மூலமாக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்காகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈட்டல், காத்தல், அதை வகுத்து, மக்களுக்கு ஒரு நல்ல திட்டங்களை வழங்குகின்ற ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அனைத்து நிலையிலும் உள்ள பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டும் என்கிற நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வி, அறிவு, பொருளாதார மேம்பாடு, வேலைத்திறன் போன்றவற்றை மையமாக கொண்டு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
இஸ்லாமிய சமய சட்டத்தில், பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு, அதைப்போல மாண்புமிகு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு திட்டத்தை செயல்படுத்தினார். அதே போன்று, பாரதி கண்ட புதுமை பெண்கள் கனவை நினைவாக்கும் வகையில் பெண் கல்விக்கு முக்கயத்துவம் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், பெண் பிள்ளைகள், படிக்க வேண்டும், உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், மூன்று ஆண்டு கால படிப்புக்கு, ரூ.36,000/-,, நான்காண்டு கால படிப்புக்கு, ரூ.48,000/-. ஐந்தாண்டு கால படிப்புக்கு ரூ.60,000/-ம் வழங்கப்பட்டு பெண்களின் படிப்பிற்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சமூகத்தை படித்த சமூகமாக உருவாக்குவதற்கு பெண்கள் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான், பெண்களுக்கு முன்னுரிமை. பேருந்துகளில் இலவச பயணம் போன்ற திட்டங்களின் மூலம் பெண்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய முஸ்லிம் மகளிர் 83 நபர்களுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 10 நபர்களுக்கு சுமார் ரூ.47 ஆயிரம் மதிப்பீட்டில் சலவைப் பெட்டிகள் வழங்கப்பட்டது..
மாவட்டத்தில் ஒரு உதவும் சங்கம் போதாது என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் அமைச்சரவை கூட்டத்தில், கருத்தை தெரிவித்திருந்தேன். அந்தந்த பகுதியில் உள்ள ஜமாத்தார்கள், அங்கங்கே பகுதியிலே இருக்கிறவர்கள், வாய்ப்பு உள்ளவர்கள் தானே முன்வந்து, ஆங்காங்கே ஒரு குழுவாக சேர்ந்து, ஐந்து லட்ச ரூபாய், பத்து லட்ச ரூபாய், நிதி திரட்டி கொடுத்து, இன்றைக்கு முதல் துவக்கமாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசலில் ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்கள் இன்று வழங்கப்பட்டது.
சங்கங்களை ஊக்குவிப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் எவ்வளவு, பங்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட பிற்படுத்தப்பட்ட, நல அலுவலர் இடத்திலே கேட்டபோது, ரூ.10 லட்சம் பங்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
விரைவில் அரசின் பங்களிப்பு ரூ.20 இலட்சம் பங்களிப்பு சேர்த்து ரூ.30 இலட்சமாக மக்களை சென்றடையும். உதவும் சங்கங்கள் மூலமாக, ஒரு காலகட்டத்தில், இஸ்லாமிய சமூகத்தில், இப்பேர்ப்பட்ட சங்கங்களை உருவாக்கி, நலிந்த மக்களுக்கு, உதவி செய்வதற்காக, உருவாக்கப்பட்ட சங்கத்தை கண்டெடுத்து, முன்னோர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடிவமைத்து மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
நீண்ட காலமாக, பழுதடைந்துள்ள பள்ளிவாசலுக்கு, பராமரிப்பு பணிகளுக்காக 70 பள்ளிவாசல்களுக்கு, ரூ.6 கோடி சட்டமன்ற மானிய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, சமுதாய மக்கள் சார்பாகவும், ஜமாத் சார்பாகவும், அந்த பள்ளிவாசலுடைய நிர்வாகிகள் சார்பாகவும், இந்த கூட்டத்தின் வாயிலாக, நன்றி தெரிவித்துள்ளனர்.
அதே போன்று கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காகவும், இந்த ஆண்டு செல்லுகின்ற விருப்பமுள்ளவர்கள், 3754 நபர்கள், விண்ணப்பம் செய்திருந்தார்கள். அதில், 1498 நபர்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு மானியம் வழங்கப்படவுள்ளது.
மக்களுக்காக செயல்படுத்தப்படும் இத்திட்டங்களுக்கு தமிழக அரசிற்கு ஒத்துழைப்பு நல்கி அரசாங்கம் நலத்திட்ட உதவியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜி.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சிவ ருத்ரய்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments