Breaking News

சித்ரகுப்தர் திருக்கோவிலில் ஆயிர கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

சித்ரா பவுர்ணமியையொட்டி தென்னிந்தியாவிலேயே சித்ரகுப்தருக்கென தனி ஸ்த்தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் ஆயிர கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கிட்டு அவர்கள் சொர்க்கம் அல்லது நரகம்  செல்வதற்கான முக்கிய முடிவுகளை எடுக்கும் உபாயமாக உள்ளவரே சித்திரகுப்தர்.


இந்த சித்திரகுப்தருக்கென தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில்  மட்டுமே தனிக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லுகாரத்தெரு பகுதியில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில், சித்திரகுப்தர் அவதரித்த தினமாகக் கருதப்படும் சித்ரா பவுர்ணமி தினமான இன்று, காலை சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு சித்திரகுப்தர் மற்றும் அவரது தேவியான கர்ணகி என்கிற சித்திரலேகாவுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைதொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க,வைர ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.



கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்விழா நடைபெறாததால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் இவ்வாண்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் பக்தர்கள் பரிகாரத்திற்காக எள்ளின் மேல் 7 நெய்விளக்கு ஏற்றி சிறப்பு அர்ச்சனை செய்து வருகின்றனர்.

இவ்விழாவினை ஒட்டி இந்து சமய அறநிலையத்துறையினரால் பொது தரிசனம்,சிறப்பு தரிசனம் என இருவகைபடுத்தப்பட்டு தனிதனியே வரிசைபடுத்தப்படுத்தப்பட்டதில் ஆயிரகணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



இவ்விழாவையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட போலீசார்,ஊர் காவல்படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இன்று இரவு சித்திரகுப்தருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று  கல்யாண திருக்கோலத்தில் திருவீதியுலா நிறைவுபெறவுள்ளது குறிப்பிடதக்கது.

No comments

Thank you for your comments