குப்பைக்கும் வரி விதிப்பு! மாநகராட்சி பட்ஜெட்டில் தடாலடி!!
கோவை, ஏப்.1-
கோவை மாநகராட்சியில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சொத்து வரியுடன் குப்பை வரி வசூலிக்கப்படும் என்றும், ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு மற்றும் ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சாலையில் வாகனங்கள் நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாநகராட்சியின், 2022-23ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் நிகழ்ச்சி, விக்டோரியா ஹாலில் நேற்று முன்தினம் நடந்தது. பட்ஜெட் புத்தகத்தை, மேயர் கல்பனாவிடம், கமிஷனர் ராஜகோபால் சமர்ப்பித்தார். அவர் வெளியிட, துணை மேயர் வெற்றிச்செல்வன் பெற்றுக் கொண்டார்.
குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துதல், தெருவிளக்குகள் அமைத்தல், குப்பை மேலாண்மை, நகர் நல மையம் கட்டுதல், இணைப்பு சாலை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் வருவாயை பெருக்கும் விதமாக, விடுபட்ட சொத்து வரி, காலியிட வரியினங்களை கண்டறிந்து, வரி விதிப்பு செய்யப்படும்.
இதன் மூலம், 20 கோடி ரூபாய் திரட்டப்படும். மறுஅளவீடு கட்டடங்களுக்கு சொத்து வரி
நிர்ணயிப்பதன் மூலம், ரூ.6.5 கோடி கிடைக்கும்.
அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் திடக்கழிவு உபயோகிப்பாளர் கட்டணம் (குப்பை வரி) வசூலிக்கப்படுகிறது. கோவை மாநகராட்சியில் வசூலிக்கப்படுவதில்லை.
இதனால், 'ஸ்வட்ச் சர்வேக்சன்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஊக்கத்தொகை பெற
முடியாமல் உள்ளது.
எனவே, 2022-23ம் நிதியாண்டில் சொத்து வரியுடன் சேர்த்து, குப்பை வரி வசூலிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரூ.13.18 கோடி வருவாய் ஈட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 38 ஆயிரத்து, 175 எண்ணிக்கையில் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்விணைப்புதாரர்களிடம் இருந்து ஆண்டு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.
பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள ஒண்டிப்புதூர், குறிச்சி பகுதியில் வீட்டு இணைப்பு வழங்கி, ஆண்டு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.
கமிஷனர் ராஜ கோபால் பதிலளிக்கையில், ''கோவையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரேங்கிங் பெறுவதில் தகுதி பெற முடிவதில்லை. சுகாதார குழு கூட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்,'' என்றார்.
கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் தொடர்ந்து பேசுகையில், ''மக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்படுகிறது. அதேபோல், மக்களை பாதிக்காத அளவுக்கு நாமும் செயல்பட வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, கவுன்சிலர்களின் விவாதம் நடந்தது. பட்ஜெட் நிதி ஒதுக்கீடு தொடர்பாக பலரும் பேசும்போது, தங்களது வார்டு குறைகளையும் தெரிவிக்க ஆரம்பித்தனர்.
இதனால், நேரம் கடந்து கொண்டே இருந்தது. அதிகாரிகள் மேயரிடம் தெரிவித்து, கவுன்சிலர்களின் விவாதத்தை இடைமறித்து நிறுத்தினர். வார்டு பிரச்னை தொடர்பான கூட்டம் இன்னொரு நாள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்பின், 2022-23ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்படுவதாக, மேயர் கல்பனா அறிவித்தார். மன்றத்தில் இருந்த கவுன்சிலர்கள், மேஜையை தட்டி வரவேற்றனர்.
ஆனால், குப்பைக்கு வரி நிர்ணயம் மற்றும் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் திட்டங்கள், தி.மு.க., கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாநகராட்சி நிர்வாகம், பொது நிதி, குடிநீர் வடிகால் நிதி, ஆரம்ப கல்வி நிதி என, மூன்று தலைப்புகளில் கணக்கு பதிவேடு பராமரிக்கிறது. இவற்றில், பொது நிதியாக ரூ.1,066.01 கோடி, குடிநீர் வடிகால் நிதியாக ரூ.1,221.42 கோடி, ஆரம்ப கல்வி நிதியாக ரூ.30.54 கோடி என,
மொத்தமாக, ரூ.2,317.97 கோடி உத்தேசமாக வருவாய் ஈட்டப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொது நிதி கணக்கில் செலவினமாக ரூ.1,088.25 கோடி, குடிநீர் வடிகால் நிதி ரூ.1,226.28 கோடி, ஆரம்ப கல்வி நிதி ரூ.22.75 கோடி என, மொத்தம் ரூ.2,337.28 கோடி செலவாகும் என்பதால், நிகர பற்றாக்குறையாக ரூ.19.31 கோடி ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில் நிறுத்தப்படும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பரீட்சார்த்த முறையில் நவீன தொழில்நுட்ப முறையில் வாகன நிறுத்த கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக, நகரில், 30 இடங்களில், 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
இத்தகவல் அறிந்ததும், அமைச்சர் செந்தில்பாலாஜி தலையிட்டு, வாகன நிறுத்த கட்டணம்
வசூலிப்பதை நிறுத்தி வைத்தார். அதில், இரு இடங்களில் மட்டும் கட்டணம் வசூலிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
முழு நிதிநிலை அறிக்கை
click here 👉 Budget 2022-2022
No comments
Thank you for your comments