25 வருடங்களாக ஊரைவிட்டு தள்ளி வைக்கப்பட்ட குடும்பம்... தொடரும் அவலம்...
தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?
தருமபுரி :
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள மலை கிராமமான செலம்பை கிராமத்தில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு புளியமரம் பிரச்சனைக்காக சுப்பிரமணி என்பவரின் குடும்பத்தை ஊர் பெரியவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர்.
சுப்பிரமணியின் தாத்தா வெள்ளையன் பெயரில், பட்டா நிலத்தில் இருந்த 4 புளிய மரம், அனுபவத்தில் இருந்த 6 புளிய மரங்களில் வருடத்திற்கு ஒருமுறை புளி அறுவடை செய்து வந்தனர்.
அப்போது ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக, ஊர் பெரியவர்கள் சுப்பிரமணியின் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்
ஊரை விட்டு தள்ளி வைத்த குடும்பத்தினரிடம், கிராமத்தில் உள்ள ஊர் மக்களிடம் பேசக்கூடாது, திருமணம், இறப்பு, பொது நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது, கிராமத்தில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் கடுமையாக விதிக்கப்பட்டது.
இதனால் சுப்பிரமணி தன்னுடைய நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்களை சிறுவயதிலிருந்தே கல்வி பயில வெளி மாவட்டங்களில் விடுதியில் தங்கி படிக்க அனுப்பியுள்ளார்.
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கி யோசித்த குடும்பத்தினர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு தாங்கள் அனைவரும் ஊருடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என நினைத்து கிராம பெரியவர்களிடம் பேசியுள்ளனர்.
அப்போது கிராமத்தினருடன் சேர்ந்து வாழவேண்டும் என்றால் தண்டனை தொகையாக ரூ.30 ஆயிரம் கட்டவேண்டும் என கிராம பெரியவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அப்படி கட்டினால் மட்டுமே ஊருடன் சேர்ந்து வாழ முடியும் என தெரிவித்துள்ளனர்.
சரி என்று ஒப்புக்கொண்ட சுப்பிரமணி குடும்பத்தினரால் ரூ.10 ஆயிரம் மட்டுமே கட்டமுடிந்தது. இந்த சூழ்நிலையில் மீதி தொகையை கட்ட முடியவில்லை.
இது குறித்து ஊர் பெரியவர்களிடம் பேசியபோது மீதமுள்ள ரூபாய் 20 ஆயிரமும், அதற்கு உன்டான வட்டி தொகையையும் கேட்டு வற்புறுத்தியுள்ளனர்.
மீதம் தொகை ரூ.20 ஆயிரம் கட்ட முடியாதபட்சத்தில் இதற்கு ஈடாக ஆடு, மாடுகளை ஒப்படைக்கவேண்டும் என கட்டளையிட்டுள்ளனர். இல்லையென்றால் ஊருக்குள் விடமாட்டோம், எனவும் சுப்பிரமணி குடும்பத்தினருக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு, தங்களை ஊரைவிட்டு தள்ளி வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தங்களை ஊர் மக்களிடம் ஒன்றிணைந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுப்பிரமணி குடும்பத்தார் தமிழக அரசுக்கும் தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த உலகத்தில் அனைத்து ஜுவராசிகளுக்கும் உரிமை உள்ளது என்று வேதாந்தம் பேசும் மக்கள்... சக குடும்பத்தை ஊரைவிட்டு தள்ளி வைத்து அந்த வீட்டு பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது... இதற்கு யார் பதில் சொல்வது... பொறுப்பேற்பது... என்ற கேள்விகளே நம்முன் நிற்கின்றன... இவர்களது கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...
No comments
Thank you for your comments