19.04.2022 அன்று கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு போட்டி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021 - 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச்சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப் பெற்றுள்ளது.
இவ்வறிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 19ஆம் நாள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத் தொகைகள் வழங்கப்பெற உள்ளன.
இதன்படி வேலூர் மாவட்டத்தில் 19.04.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று கல்லூரி / பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. போட்டியில் பங்கேற்கும் கல்லூரி / பள்ளி மாணவர்களை 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வர் மற்றும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.
இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை ரூ.2000/- வீதம் வழங்கப் பெறவும் உள்ளன.
பள்ளிப்போட்டி காலை 10.00 மணிக்கும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்கப்பெறும் எனவும் இப்போட்டிகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இப்போட்டிகள் நடைபெறும்.
இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறும், வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கேட்டுக்கொள்கிறார்.
செய்தி வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர் மாவட்டம்
No comments
Thank you for your comments