Breaking News

பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர் வரி செலுத்த வேண்டுகோள்

சேலம், மார்ச் 30-

சேலத்தில் வருகிற 31ம் தேதிக்குள் பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர் வரி செலுத்த வேண்டும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 60 கோட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும், மாநகர பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுவதற்கும் தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலிமனைவரி, கடைவாடகை, உரிமையாணை கட்டணங்கள், பாதாள சாக்கடை திட்ட வைப்புதொகை மற்றும் குடிநீர் கட்டண வேறுபாட்டு வைப்புத்தொகைகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே செயல்பட்டு வரும் 9 வரி வசூல் மையங்களோடு கூடுதலாக 5 சிறப்பு வரி வசூல் மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சூரமங்கலம் உழவர் சந்தை அம்மா உணவக வளாகம், அரிசிப்பாளையம் காமராஜர் திருமண மண்டப வளாகம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம்,  தொங்கும் பூங்கா வளாகம், அப்புசெட்டி தெரு,  அம்மாபேட்டை மண்டல அலுவலகம், தேர்வீதி மாநகராட்சி பள்ளி வளாகம், நாராயண நகர் எம்.ஜி.ஆர் மருத்துவமனை அருகில்,  

கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம், மணியனூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், ஜாரிகொண்டலாம்பட்டி வார்டு அலுவலகம், தாதகாப்பட்டி வரி வசூல் மையம், கருங்கல்பட்டி அம்மா உணவக வளாகம் என 14 வரிவசூல் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் வருகிற 31&ந்தேதி வரையிலான அனைத்து நாட்களிலும் வரி இனங்களை செலுத்தலாம்.

மேலும் https://tnurbanepay.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தலாம்.

எனவே, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய அனைத்து வரி இனங்களையும்  வருகிற 31ம் தேதிக்குள் செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Thank you for your comments