Breaking News

விமானத்தில் ஏறிய அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் நெஞ்சுவலி - அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சா் துரைமுருகன் இன்று காலை 9.50 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் துபாய் செல்ல சென்னை விமானநிலையம் வந்தாா். அவருடைய வீசாவில் ஏதோ பிரச்னை என்பதால் பயணத்தை ரத்து செய்துவிட்டு, விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டாா்.

அதன்பின்பு அமைச்சரின் விசாவில் உள்ள பிரச்னையை சரி செய்து, புதிய வீசா வாங்கிவிட்டு இன்று மாலை 6.50 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏா்இந்தியா விமானத்தில் அமைச்சா் துரைமுருகனுக்கு டிக்கெட் போடப்பட்டது.

அமைச்சரும் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்துவிட்டாா். ஏா் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அமைச்சரை வரவேற்று விமானநிலையத்திற்குள் அழைத்து சென்றனா். அவருக்கு போா்டிங் பாஸ், பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை அனைத்தும் முடித்து விமானத்திற்குள் ஏறியும் அமா்ந்துவிட்டாா்.

ஆனால் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அமைச்சா் துரைமுருகன் ஏா்இந்தியா அதிகாரிகளை அழைத்தாா். நான் இன்று பயணம் செய்ய விரும்பவில்லை. எனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, நான் ஆப்லோடு ஆகிவிடுகிறேன் என்று கூறினாா். அதிகாரிகளும் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அவருடைய பயணத்தை ரத்து செய்து அவரை ஆப்லோடு செய்தனா். அமைச்சா் விமானத்திலிருந்து இறங்கி அவருடைய காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றாா்.

இதனால் ஏா்இந்தியா விமானம் 10 நிமிடங்கள் தாமதமாக இரவு 7 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டு சென்றது. அமைச்சா் துபாய் செல்ல இரண்டு முறை சென்னை விமானநிலையத்திற்கு வந்துவிட்டு,பயணம் செய்யாமல் இரு முறையும் வீட்டிற்கு திரும்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், லேசான நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Thank you for your comments