நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு போட்டியில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா 29.03.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவும், உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழாவும் சேர்ந்தே கொண்டாடப்படுகிறது. இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 - வழங்கப்பட்ட நுகர்வோர்களுக்கான உரிமை குறித்த விழிப்புணர்வை தூண்டுவதற்காக கொண்டாடப்படுகிறது.
15.3.1983-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-15-ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
வணிக சந்தையில் வாங்கும் பொருட்களின் தரம், பாதுகாப்பு, நியாயமான விலை, உற்பத்தியாளர் குறித்த விவரம், சேவைகள் மற்றும் அதன் விதிமுறைகள் போன்றவை குறித்து நுகர்வோர் அறிந்து அதைப்பயன்படுத்துவது மிக இன்றியமையாதது ஆகும். எனவே, இது குறித்து விழிப்புணர்வை உருவாக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கு, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் பொதுமக்களிடையே இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஆகியவை இச்சட்டத்தை செயல்படுத்தும் கருவியாக அமைந்துள்ளது.
அவற்றின் சிறப்பம்சங்கள் என்னவென்றால்,
● எளிய வழக்காடு முறைகள்
● வழக்கறிஞர் தேவையில்லை நாமே வாதிடலாம்
● பதிவு தபாலில் புகாரை அனுப்பலாம்
● பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் சங்கங்கள் நுகர்வோர்கள் சார்பில் புகார்களை அளித்து வழக்கு தொடுக்கலாம்.
● வழக்குகள் பதிவு செய்து வழக்கு நடத்துவதில் குறைந்த செலவு நஷ்ட ஈடு பெற சட்டத்தில் வழிவகை உள்ளது.
இதில் நுகர்வோர்களுக்கு உரிமைகள் மட்டுமல்லாமல் கடமைகளும் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அவை ஐந்து கட்டளைகளாக கொள்ளலாம்:
❖ Reduce - தேவைக்கு அதிகமான பயன்பாட்டை குறைத்துக் கொள்ளல்.
❖ Refuse - தரமற்ற, தேவையில்லாதவைகளை பயன்படுத்த மறுத்தல்.
❖ Reuse - மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் பொருட்களை வாங்குதல்.
❖Recycle - பயன்படுத்தியவைகளை மீண்டும் மறுபடியும் உபயோகப் படுத்துதல்.
❖ Rethink - பொருட்களை வாங்கும் முன் பலமுறை சிந்தித்து வாங்குதல்.
எனவே, நுகர்வோர்கள் உரிமைகளையும், கடமைகளையும் நன்கறிந்து விழிப்புணர்வோடு செயல்படுவது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோளாக அமையும்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவ ருத்ரய்யா, இணைப்பதிவாளர்(கூ.ச.) திருமதி.எஸ்.லட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ரெ.திருவளர்செல்வி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்(பொ) திரு.இரா.ஜோதிசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments