விதி மீறி இயங்கிய தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் விதி மீறி இயங்கிய தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால்மேற்கொள்ளப்பட்டன.
ஈரோடு வட்டத்தில் பெருமளவில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.
சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை மீண்டும் மறு உபயோகப்படுத்தி வருகின்றன. பிரிண்டிங் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தி வருகின்றன.
தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டு நீர் நிலைகள் மாசு படுவதை தடுத்திட ஈரோடு மாசு கட்டுப்பாடு வாரியம்
மற்றும் பறக்கும் படை அலுவலர்களால் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரிக்காது கழிவுநீரை அருகிலுள்ள கால்வாயில் வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, சூரியம்பாளையம் பகுதியில் இயங்கி வந்த ஒரு சலவை தொழிற்சாலையானது அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல், சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக்கழிவு நீரை அருகிலுள்ள சாக்கடைக் கால்வாயில் வெளியேற்றியது கண்டறியப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் அத்தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சாயம், சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள் பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், பிரிண்டிங் மற்றும் சைசிங் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு நிலையத்தையும் தொடர்ந்து முறையாக இயக்கி சுற்றுச்சூழலையும், நீர் நிலைகளையும் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தொழிற்சாலைக் கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் திடக்கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டும் வாகனங்கள் மீதும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments