Breaking News

பெண்கள் விடுதியில் அரைகுறை ஆடையுடன் சுற்றி திரியும் மர்மநபர்கள்... 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீர் போராட்டம்

கோவை

கோவை பாரதியார் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மர்மநபர்கள் அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிவது குறித்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே மருதமலை சாலையில் உள்ளது பாரதியார் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் வெளிமாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் கோவை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மாணவிகளும் படித்து வருகின்றனர்.

வெளிமாநில, வெளிமாவட்ட மாணவ, மாணவிகள் தங்கி கொள்வதற்கு வசதியாக விடுதிகளும் உள்ளது. மாணவிகள் தங்கும் விடுதி பல்கலைக்கழகத்திற்கு எதிரே ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.

இந்த விடுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்த விடுதிக்குள் மர்மநபர்கள் சிலர் அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிந்துள்ளனர்.

மேலும் பெண்கள் அறையின் அருகே சென்று டார்ச்லைட் அடித்ததாகவும் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியான பெண்கள் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அருகே தங்கியிருந்த பேராசிரியர்கள் ஓடி வந்தனர்.

அவர்களிடம், யாரோ மர்மநபர்கள் சுற்றி திரிகின்றனர் என தெரிவித்தனர். இதையடுத்து விடுதியில் உள்ள வார்டன், காவலர்கள் அனைவரும் இணைந்து விடுதி வளாகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் எங்கு தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்று காலை பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு விடுதியில் தங்கியிருக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேண்டும். வேண்டும் பாதுகாப்பு வேண்டும். மர்மநபர்களை பிடித்து கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்களை எழுப்பியபடி சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவிகள் கூறியதாவது:- நாங்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறோம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நள்ளிரவு நேரங்களில் மர்மநபர்கள் சிலர் இங்கு சுற்றி திரிகின்றனர். அப்படி சுற்றி திரிபவர்கள் அரைகுறை ஆடையுடன் வந்து, விடுதிக்குள் நுழைந்து செல்போன்களை திருடி செல்கின்றனர். இதனால் இங்கு தங்குவதற்கே அச்சமாக உள்ளது.

இதுகுறித்து வார்டன் மற்றும் பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இங்கு சுற்றி திரியும் மர்மநபர்களை கைது செய்ய வேண்டும். எங்களுடன் துணைவேந்தர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதிக்கு இன்னும் 4 நாட்களில் பெண் பாதுகாவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அதுவரை பெண் போலீசார் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.

எனவே மாணவிகள் இங்கிருந்து கலைந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்பேரில் மாணவிகளும் 3 மணி நேரத்திற்கு பிறகு தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து துணைவேந்தர் காளிராஜ் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து எனக்கு நேற்று தான் தெரியவந்தது. ஆனால் ஒரு மாதமாக நடந்து வருவதாக மாணவிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த விசாரணை கமிட்டி ஒன்றை அமைத்துள்ளேன். விரைவில் அந்த கமிட்டி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments

Thank you for your comments