'மக்களை தேடி மேயர்' திட்டம் - ஈரோடு மாநகராட்சியின் 2-வது பெண் மேயர் நாகரத்தினம்...
ஈரோடு :
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தலைமையில் நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் ஈரோடு மேயராகவும், செல்வராஜ் அவர்கள் துணை மேயராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஈரோடு மாநகராட்சியின் 3-வது மேயராக பதவி ஏற்றுள்ள எஸ்.நாகரத்தினம், 2-வது பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்று உள்ளார்.
04.03.2022 அன்று காலை சுமார் 9.30 மணிக்கு மேயர் தேர்தல் நடத்தப்பட்டது . இதில் மாமன்ற 50 வது வார்டு உறுப்பினர் நாகரத்தினம் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தார் . மாமன்ற உறுப்பினர்கள் 54 நபர்கள் மேயர் தேர்தலில் பங்கேற்றனர். மேலும் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் மேற்படி 50 வது வார்டு உறுப்பினர் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு வேட்பு மனு தகுதியானதாக அறிவிக்கப்பட்டது .
பின்னர் தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள், 2006 விதி 101 ன்படி நாகரத்தினம் அவர்கள் ஈரோடு மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தலைமையில் பதவியேற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து மதியம் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தலைமையில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலையில் துணை மேயராக தேர்தெடுக்கப்பட்டு செல்வராஜ் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் நாகரத்தினம்,
தனக்கு மேயர் வாய்ப்பினை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறினார். கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், ஈரோடு மாநகராட்சி மக்கள் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், இன்னும் சில மாதங்களில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை பணிகள் போன்ற மக்கள் பயனுள்ள திட்டங்கள் நிலுவையில் உள்ளதாகவும், முதல் வேலையாக இதனை சரி செய்து, மாநகர் முழுவதும் தார் சாலைகள் விரைவில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
'மக்களை தேடி மேயர்' திட்டம்
மேலும், மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள சமுதாயக்கூடங்கள் சரிசெய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்படும் எனவும், புதிய சமுதாயக் கூடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், 'மக்களை தேடி மேயர்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்கள் வசிக்கும் பகுதிக்கு மாதத்திற்கு ஒரு முறை நேரடியாக வந்து மக்களை சந்தித்து, நேரடியாக அவர்களது குறைகளை கேட்டறிந்து, அதை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதேபோல், இன்னும் பல்வேறு திட்டங்கள் ஈரோடு மாநகராட்சி மக்களுக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறிய மேயர் நாகரத்தினம், ஒரு சில நாட்களில் அமைச்சரின் ஆலோசனையுடன், அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். மேலும், ஈரோடு மாநகராட்சியை செம்மைப்படுத்த பொதுமக்கள், மாநகராட்சி சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு மாநகராட்சியின் வரலாறு
ஈரோடு மாநகராட்சி, கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக செயல்பட தொடங்கியது. அப்போது நகர் மன்ற தலைவராக இருந்த தி.மு.க.வின் குமார் கே.முருகேஸ் ஈரோடு மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேயருக்கான செங்கோலை வழங்கி பதவியை வழங்கினார்.
இந்த காலக்கட்டத்தில் ஈரோடு மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. இதுபோல் மேட்டூரில் இருந்து ஈரோட்டுக்கு குழாய் மூலம் குடிநீர் என்ற திட்டம் மாற்றப்பட்டது ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்கான ஆலோசனையும் வைக்கப்பட்டது.
அதன்பின்னர், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் சேர்த்து ஈரோடு மாநகராட்சி விரிவு படுத்தப்பட்டது. 110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 60 கவுன்சிலர்கள் என்ற வளர்ச்சியுடன் 2011-ம் ஆண்டு ஈரோடு மாநகராட்சியின் முதல் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் 60 வார்டு கவுன்சிலர்கள் தேர்தலும், மாநகராட்சி மேயரை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்து எடுக்கும் முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அதிமுக சார்பில் போட்டியிட்ட மல்லிகா பரமசிவம் மேயராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் கே.சி.பழனிச்சாமி துணை மேயர் ஆனார்.
இந்த காலக்கட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்கான ஆய்வுப்பணிகள் தொடங்கின. விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
10 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 60 வார்டுகளில் 48 வார்டுகளை திமுக. கூட்டணி கைப்பற்றியது. இந்த தேர்தல் கவுன்சிலர்கள் மூலம் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டது. எனவே தேர்தல் முடிந்த பிறகும் ஈரோடு மாநகராட்சியின் மேயர் யார் என்ற பரபரப்பு இருந்தது.
ஈரோடு நகராட்சியாக இருந்தபோது 1917-ம் ஆண்டு முதல் 1919-ம் ஆண்டு வரை தந்தை பெரியார் நகர்மன்ற தலைவராக இருந்தார். ஈரோடு நகராட்சியை விரிவு படுத்த வேண்டும் என்று நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் பெரியார். பின்னர், அவர் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக மாறினார். அவரை பின்பற்றி, அவரது கொள்கைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் திராவிட கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியை பிடித்தன. எனவே ஈரோடு திராவிடக்கட்சிகளின் தலைநகராக மாறியது.
குறிப்பாக தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஈரோட்டை குருகுலம் என்று அழைப்பது வழக்கம். அதுமட்டுமின்றி, பெரியாரின் மண் ஈரோடு மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது அவரது கொள்கைகளுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக இருந்தது.
எனவே ஈரோடு மாநகராட்சியின் மேயர் பதவியை பிடிக்கும் பெண் யார் என்ற கேள்வியும், பரபரப்பும் தேர்தலை தொடர்ந்து இருந்தது. இந்தநிலையில் எஸ்.நாகரத்தினம் ஈரோடு மேயர் வேட்பாளர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து நடந்த மறைமுக தேர்தலில் எஸ்.நாகரத்தினம் போட்டியின்றி ஈரோடு மேயர் ஆனார். ஈரோடு மாநகராட்சியின் 3-வது மேயராக பதவி ஏற்று உள்ள எஸ் நாகரத்தினம், 2-வது பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்று உள்ளார்.
பெரியார் கண்ட கனவுகளை நிறைவேற்ற கிடைத்திருக்கும் வாய்ப்புகளை எஸ்.நாகரத்தினம் நிறைவேற்றுவாரா...? ஈரோடு மாநகராட்சி பொலிவுறு மாநகரமாக திகழவும், மாநகர் இன்னும் விரிவடைந்து தொழில், வேலைவாய்ப்பு, கல்வி என்று அனைத்து துறையிலும் முன்னேற இவரின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேயர் விவரம்: சு.நாகரத்தினம் (51), இல்லத்தரசி; ஈரோடு, சென்னிமலை சாலை, லட்சுமி கார்டன், கே.எஸ்.அவென்யூவில் வசிக்கிறார். இவரது கணவர் மு.சுப்பிரமணியன், மாநகர தி.மு.க., செயலாளர். கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர்களின் மகன்கள் கவின் ராஜ்குமார், ஜெயபிரபு. தி.மு.க., அடிப்படை உறுப்பினராக, 1986 முதல் நாகரத்தினம் உள்ளார்.
துணை மேயர் விவரம்: வி.செல்வராஜ் (62), வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர்., வீதியில் வசிக்கிறார். எட்டாம் வகுப்பு வரை படித்தவர். பெரியசேமூர் திமுக செயலாளர். கடந்த, 1976 முதல் திமுக உறுப்பினராகவும், 2008 - 11 வரை வீரப்பன்சத்திரம் நகராட்சி துணை தலைவராகவும், தி.மு.க., ஒன்றிய பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதியாக இருந்துள்ளார். முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். இவரின் மனைவி ஈஸ்வரி. மகள் கீதா, மகன் விக்னேஷ் உள்ளனர்.
No comments
Thank you for your comments