நந்தா தொழில்நுட்ப கல்லூரியில் விளையாட்டு விழா
ஈரோடு
ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லூரியில் 05.03.2022 அன்று விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் தலைமைதாங்கினார். இவ்விழாவில் ஈரோடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவில் ஈரோடு காவல் துணை கண்காணிப்பாளர் ஏ. கனகேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டு விழாவினை துவக்கி வைத்தார்.
இதில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி முனைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் நத்தா பொறியியல் கல்லூரியின் இயக்குநர் முனைவர் செந்தில்குமார் ஜெயவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். நந்தகோபால் வரவேற்புரையாற்றினார்.
பின்னர், கல்லூரியின் உடற்பயிற்சி பேராசிரியர் வி.என். பாஸ்கரன் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிக்கு உள்ளே மற்றும் பிற கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலத்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல் அடங்கிய அறிக்கையினை வாசித்ததை தொடர்ந்து, ஈரோடு காவல் துணை கண்காணிப்பாளர் ஏ. கனகேஸ்வரி அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
அதில் மாணவ மாணவிகள் நல்ல உடல்நலத்துடனும், மனநலத்துடனும் இருந்தாலே வெற்றி அவர்களின் கைக்கு வரும் என்றும் விளையாட்டில் வெற்றி பெறுவதைவிட, பங்கேற்பது மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
மேலும் பெண்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எவ்வாறு தவிர்ப்பது போன்ற பல்வேறு விபரங்களை எடுத்துக் கூறினார். மாணவர்கள் தேவையற்ற செயல்களை செய்வதை தவிர்த்து அவர்களது படிப்பில் மட்டும் நன்றாக கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என்றும் கூறினார்.
UPSC, TNPSC போன்ற மத்திய மாநில அரசு தேர்வுகளில் அனைவரும் அதிகளவில் பங்கேற்க வேண்டும் எனவும் அந்த முயற்சியில் உடனடியாக வெற்றி பெறாவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் எனவும் அதற்கு ஒழுக்கத்துடன் கூடிய படிப்பு மிக அவசியம் என்றும் அவர் எடுத்துக் கூறினார்.
பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெற்றதன் அடிப்படையில் 2021 ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான பட்டத்தை மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் இறுதியாண்டு மாணவர் டி.கௌதம் பெற்றார். துறைகளுக்கிடையேயான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மாணவர்கள் பிரிவில் இயந்திர பொறியியல் துறையும், மாணவிகள் பிரிவில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையும் பெற்றன.
இறுதியில் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த ஆசிரியர்கள், கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினார்கள்.
No comments
Thank you for your comments