108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விநாயகமூர்த்தி மற்றும் வாகன ஓட்டுநர் மோகனுக்கு குவியும் வாழ்த்துக்கள்...
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா, பீக்கிரி பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி மகேஷ். நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவ வலியால் துடித்ததை அறிந்த அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.
அந்த பெண் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். 108 ஆம்புலன்ஸ் சத்தியமங்கலம் ஈஸ்வரன் கோவில் அருகே வந்தபோது மகேஷ்க்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட சத்தியமங்கலம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது மகேஷ்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விநாயகமூர்த்தி மற்றும் வாகன ஓட்டுனர் மோகன் ஆகியோரின் இந்த செயல் அனைவரின் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
No comments
Thank you for your comments