Breaking News

ரஷ்யாவிற்கு செக் வைக்க போகும் அமெரிக்கா, ஜெர்மனி... சிக்கலில் இந்தியா..!

மாஸ்கோ: 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அந்த நாடு பல்வேறு பொருளாதார தடைகளை, உலக நாடுகளின் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக சர்வதேச பண பரிவர்த்தனை தளமான SWIFT தளத்தில் இருந்து ரஷ்யாவை நீக்க உலக நாடுகள் முடிவு செய்துள்ளன.

உலக நாடுகளுக்கு இடையே பண பரிவர்த்தனை செய்யும் அமைப்பு SWIFT ஆகும். ஆனால் நெட் பேங்கிங்கில் நாம் பரிவர்த்தனை செய்வது போல அல்லாமல் இது வேறு வகையில் செயல்பட கூடியது.

ஒரு நாட்டின் வங்கியில் இருந்து இன்னொரு நாட்டு வங்கிக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்படும் போது அதை உறுதி செய்யும் மெசேஜிங் தளமாக இது செயல்படும். ஒரு நாட்டின் வங்கி இன்னொரு நாட்டு வங்கிக்கு பணம் அனுப்பவதும் இந்த SWIFT தளம் மூலமே உறுதி செய்யப்படும்.

SWIFT தளம் இன்றி சர்வதேச அளவில் வங்கிகள் பரிவர்த்தனை மேற்கொள்வது மிக கடினம். உலக அளவில் நம்பப்படும் சர்வதேச, பாதுகாப்பான பரிவர்த்தனை SWIFTதான். மிக மிக பாதுகாப்பானது இது. 1970களில் இருந்து SWIFT பயன்பாட்டில் இருக்கிறது. பெல்ஜியத்தை சேர்ந்த கோ ஆப்பரேட்டிவ் வங்கிகள் உருவாக்கிய இந்த SWIFT தளம் தற்போது சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிகள் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறது. 300க்கும் மேற்பட்ட ரஷ்ய வங்கிகள், ரஷ்ய நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில்தான் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவை SWIFT சேவையில் இருந்து தடை செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் இந்த முடிவிற்கு பரிந்துரை செய்துள்ளன. விரைவில் SWIFT தளத்தில் இருந்து ரஷ்யா அதிகாரபூர்வமாக நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இப்படி நடக்கும் பட்சத்தில் அது ரஷ்யாவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் SWIFT மூலம் பல டிரில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதில் ரஷ்யாதான் இரண்டாவது இடத்தில் உள்ளது. 

ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதி, ஆயுத ஏற்றுமதி, தானிய ஏற்றுமதி அனைத்திற்கும் SWIFT தளத்தையே நம்பி இருக்கிறது. இதனால் மொத்தமாக ரஷ்யாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போரால் உலக நாடுகளின் சந்தையில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் பொருளாதாரத்தை இது வெகுவாக பாதிக்கும். 2012ல் சில ஈரான் வங்கிகள் SWIFT தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் அவர்களின் எண்ணெய் ஏற்றுமதி 30 சதவிகிதம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா இதில் முழுமையான தடையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அந்த நாட்டின் ஜிடிபியை SWIFT தடை பெரிய அளவில் பாதிக்கும். முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதியை முடக்கி போடும். அதே சமயம் ரஷ்யாவை எண்ணெய்க்கும், ஆயுதத்திற்கும் நம்பி இருக்கும் ஜெர்மனி, ஐரோப்பா நாடுகளும் பாதிக்கப்படும்.  ஆனாலும் இந்த நாடுகளை ரஷ்யாவை தனிமை படுத்துவதற்காக இந்த தியாகத்திற்கு தயாராகி உள்ளது. 

ரஷ்யா மீதான SWIFT தடை இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா பல்வேறு விஷயங்களில் ரஷ்யாவை நம்பி இருக்கிறது. முக்கியமாக எண்ணெய், ஆயுத இறக்குமதியை இந்தியா ரஷ்யாவில் இருந்தே செய்கிறது.  இரண்டு நாடுகளுக்கும் இடையில் 9.4 பில்லியன் டாலர் வர்த்தகம் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. இதில் 90 சதவிகிதம் SWIFT மூலமே நடக்கிறது. ரஷ்யா SWIFT தடை பெற்றால் இந்தியாவையும் அது பெரிதும் பாதிக்கும். முக்கியமாக இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி, எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம், AK-203 போன்ற பாதுகாப்பு கருவிகளின் இறக்குமதியும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Thank you for your comments