Breaking News

தமிழகம் என்றாலே நம்பர் 1.. மத்திய அரசுக்கு மீண்டும் நிரூபிப்பு... அமைச்சர் மா.சு., அசத்தல் ட்வீட்!

புதுடெல்லி: 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்வேறு துறைகளில் தமிழகம்தான் நம்பர் 1 என்பதை மத்திய அரசுக்கு தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வரும் நிலையில் நம்பர் 1 அமைச்சர் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தையும் வளர்ச்சியில் முதலிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றுதான் மாநில அரசுகள் கருதும். அந்த வகையில் அதிமுக ஆட்சியிலும் தமிழகம் பல்வேறு துறைகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வந்தது. அது போல் தற்போது திமுக ஆட்சியிலும் தமிழகம் பல துறைகளில் முதலிடத்தில் உள்ளது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது அவர் கூறியது தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றுவேன் என்றார். அது போல் நான் முதன்மையிடத்தில் இருப்பது முக்கியமல்ல, நம் மாநிலம் முதலிடத்தில் இருக்க வேண்டும் என அவ்வப்போது கூறுவார்.

அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்தா நல்லாட்சி தினத்தையொட்டி வெளியிட்ட 2021 ஆம் ஆண்டுக்கான நல்லாட்சி குறியீடு அறிக்கையில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய அளவிலான மீன்பிடிப்பதில் 2020- 2021 ஆம் ஆண்டு தமிழகம் 10 லட்சம் டன் மீன்களை பிடித்து முதலிடத்தில் உள்ளது.

அது போல் 2019-2020 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை தரவரிசைப்படுத்தி மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு பட்டியலை தயாரித்துள்ளது. 24 அளவுகோல்களை வைத்து 4ஆவது ஆண்டாக இந்த பட்டியலை உருவாக்கியுள்ளது. அதில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் கடைசி இத்திற்கு தள்ளப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில் முக்கியமானது மருத்துவ கட்டமைப்பு. அதிலும் நம் தமிழகம் டாப்புதான். நாட்டில் நீண்ட நெடுங்காலமாக மருத்துவ கட்டமைப்பில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் பல துறைகளில் முதலிடத்திலும் முன்னணி இடத்திலும் இருக்கும் நிலையில் தமிழக அமைச்சர் ஒருவர் தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசு சார்பில் 75 நகரங்கள் பங்கேற்ற உடல் ஆரோக்கிய சவால் போட்டியில் 26 நாட்களில் 390 கி.மீ. தூரம் ஓடியும் நடந்தும் முதலிடம் பிடித்துள்ளார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.

வாக்கிங் மற்றும் சைக்கிளிங் சவாலில் முதல் 5 இடம் பிடித்த அமைச்சர்கள், சிஇஓக்கள் அல்லது ஆணையர்களின் பட்டியல் வெளியானது.  இதில்  390 கிலோ மீட்டர் ஓடி முதலிடத்தில் மா சுப்பிரமணியன், 111 கி.மீ. தூரம் ஓடி இரண்டாவது இடத்தில் சேத்தான் நந்தானி (துணை ஆணையர்) 2 கிமீ மட்டும் பயணித்து 3ஆவது இடத்தில் ஜெய்ப்பூர் சிஇஓ அவதேஷ் மீனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் நடத்திய FREEDOM RUN CHALLENGE இந்திய அளவில் 75 நகரங்கள் கலந்துகொண்ட சவால் போட்டியில் அதிக எண்ணிக்கையிலான செயல்பாடுகளில் 390 கிலோ மீட்டர் ஓடி முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது... என தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார் . 

இவர் எந்த ஊருக்கு சென்றாலும் சரி அங்கு எப்படியாவது ஓட்டப்பயிற்சியையும் உடற்பயிற்சியையும் யோகாவையும் செய்துவிடுவார். மாரத்தான் பயிற்சியையும் அவ்வப்போது நிகழ்த்தி சாதனை படைத்து வருகிறார். 

திமுக ஆட்சி அமைந்தவுடன் தடுப்பூசிகளை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் டெல்லி சென்ற அமைச்சர் மா சுப்பிரமணியன் அங்கு நாடாளுமன்ற வளாகத்தில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டது அனைவரும் அறிந்ததே. முதல்வர் ஸ்டாலின் தனது உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரும் தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் செய்யும் கடின பயிற்சிகள் வீடியோவாக வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 


 


No comments

Thank you for your comments