Breaking News

வேலூரில் நெரிசலை குறைக்க லாங்கு பஜார் தரைகடைகள் பழைய மீன் மார்க்கெட்டுக்கு மாற்றப்படும்! - DIG ஆனி விஜயா

வேலூர் :

வேலூரில் நெரிசலை குறைக்க பழைய பஸ் நிலையத்தில் பார்க்கிங் வசதி, லாங்கு பஜார் தரைகடைகள் பழைய மீன் மார்க்கெட்டுக்கு மாற்றப்படும் என டிஐஜி கூறினார்.



வேலூர் லாங்குபஜார், மண்டிதெரு உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் இன்று காலை நடந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். 

டிஐஜி ஆனி விஜயா செய்தியாளர்கள் சந்திப்பில்  கூறியதாவது:-

வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதாக புகார்கள் வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  இதற்காக மண்டி தெரு, லாங்கு பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தேன். 

லாங்குபஜார் பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. அங்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு கடைக்கு செல்கின்றனர்.  எனவே வாகனங்களை அங்கு நிறுத்தாமல் இருக்க வேலூர் பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை வாகன நிறுத்தும் இடமாக மாற்றப்பட உள்ளது.

தற்போது புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் பாதியளவு வரத்து குறையும்.  அதைத்தொடர்ந்து பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை வாகன நிறுத்துமிடமாக மாற்றப்படும்.

சாரதி மாளிகை, வேலூர் கோட்டை பகுதிகளில் பலர் ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர்.  இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு ஆட்டோ டிரைவர்களை அழைத்து அவர்களுக்கு இது குறித்து அறிவுரை வழங்கப்பட உள்ளது.  மேலும் பழைய பஸ் நிலையத்தில் தேவையில்லாமல் உள்ளே வரும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

லாங்குபஜார் தரை கடைகள் பழைய மீன் மார்க்கெட் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் லாங்கு பஜார் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட ஆலோசிக்கப்பட்டுள்ளது.  கிரீன் சர்க்கிள் அகலம் குறைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் போக்குவரத்து நெரிசல் அங்கு குறையும். 

வேலூர் மக்கான் சிக்னல், காமராஜர் சிலை சந்திப்பு, நேஷனல் தியேட்டர் சந்திப்பு பகுதிகளில் மாலை நேரங்களில் (பீக் அவர்ஸ்) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   இந்த மாற்றம் காலை வேளையிலும் செய்யலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments